சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் சுந்தரலிங்கம் உட்பட 15 கவுன்சிலர்கள் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், "தேவகோட்டை நகராட்சியில் அதிக வார்டுகளை அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது. தலைவரை தேர்வு செய்ய பெரும்பான்மைக்கு 14 கவுன்சிலர்கள் தேவை. எங்கள் தரப்பில் நகராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.நாங்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், குதிரை பேரத்திற்காக ஆளுங்கட்சியினரின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளோம்.

 

நகராட்சியின் 16வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் முத்தழகு வெற்றிச் சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் பெற்றபின், அவரது குடும்பத்தினர் ஆளுங்கட்சியின் அடையாளம் தெரியாத நபர்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாகினர்.பாதுகாப்பு அளிக்கக் கோரி முத்தழகுவின் மனைவி, சிவகங்கை எஸ்.பி., மற்றும் தேவகோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். நடவடிக்கை இல்லை. எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர். இந்த விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 'மனுதாரர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.

 



மத அமைப்புகள், கட்சிகளின் பேரணியின் போது பொதுச்சொத்துகளுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்க டெபாசிட் தொகையை பெற வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம் பரிந்துரை 


தமிழகத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் மத நிறுவனங்களுக்கு பேரணி நடத்த அனுமதி வழங்கும்போது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படுவதை தடுக்கவும், அதனை ஈடுகட்டவும் முன்கூட்டியே அதற்கான தொகையை டெபாசிட் செய்ய நிபந்தனை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. சிவகங்கை ஸ்ரீ சொர்ணகாளீஸ்வரர் கோயில் கோபுரம் வழியாக புனித அருளானந்தர் ஆலய தேரை கொண்டுச்செல்ல அனுமதிக்க கூடாது எனக் கேட்டு, ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.




இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், "தமிழகத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் மத நிறுவனங்கள் எப்போதெல்லாம் பேரணி நடத்த அனுமதி கேட்கிறதோ, அப்போது சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் பேரணியில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் அதை ஈடுகட்டும் வகையில் முன்கூட்டியே குறிப்பிட்ட அளவு தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்க வேண்டும் என அரசுக்கும், டிஜிபிக்கும் நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது" என உத்தரவில் கூறியுள்ளார்.

 



 


குரூப் 2 , டி.என்பி.எஸ்.சி தேர்வுக்கான இலவச பயிற்சி மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நடைபெற உள்ளது.

மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி நடக்கவுள்ளது. பாட குறிப்புகளை tamilnadu careerservices.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். திங்கள், - வெள்ளி மற்றும் சனி, ஞாயிறுகளில் பயிற்சிநடக்கிறது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல், அரசு பணியாளர் தேர்வு வாரியத்தில் பதிவு செய்த விவரத்துடன் நேரில் பதிவு செய்யலாம் என துணை இயக்குனர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.