அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் டி-20 உலகக்கோப்பைக்கு பிறகு, டி-20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், இது குறித்து ஒரு நீண்ட விளக்கத்தை வெளியிட்டுள்ள கோலி, ”உறுதியாக இந்த முடிவை எடுப்பதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. எனக்கு மிகவும் நெருக்கமான ரவி அண்ணன் (ரவி சாஸ்திரி), ரோஹித் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தப் பிறகு, டி-20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு எனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம் என முடிவு செய்துள்ளேன்.” என தெரிவித்துள்ளார். இதனால், டெஸ்ட், ஒரு நாள், டி-20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன்சியை பகிர்ந்தளிப்பதற்கான நேரம் வந்துவிட்டது உறுதியாகியுள்ளது. 


முன்னதாக, டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்ல தவறினால், டி-20 கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகிவிடுவார் என்றும், துணை கேப்டன் ரோகித் சர்மாவிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்க உள்ளதாகவும் ஊடங்களில் தகவல் வெளியானது. தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகவும், இழந்த தனது பார்மை மீட்பதற்காகவுமே கோலி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், டி-20 உலககோப்பை போட்டித் தொடர் முடிந்த பிறகு விராட் கோலி இதை அறிவிப்பார் என்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியானதாக தனியார் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது.


இப்போது, விராட் கோலி பதவி விலக முடிவு செய்திருக்கும் நிலையில், அடுத்து இந்திய அணியின் டி-20 கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம் செய்யப்படுவார் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் பரவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலி பதவி விலகியதால், இந்திய அணியின் டி-20 எதிர்காலம் என்னவாகும், ரோஹித்தின் டி-20 கேப்டன்சி ரெக்கார்டுகள் என்ன என்பதை பார்ப்போம்.


கோலிக்கு அழுத்தம்:


டி-20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டனாக இதுவரை 45 போட்டிகளில் வழிநடத்திச் சென்றுள்ள கோலி, 27 போட்டிகளில் வெற்றியை பெற்று தந்துள்ளார். 14 போட்டிகளில் தோல்வியையும், 4 போட்டிகள் முடிவு எட்டப்படாமலும் முடிந்துள்ளது. டி-20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டனாக விராட் கோலியின் வெற்றி சதவிகிதம் - 65.11 %


எனினும், வெற்றிகளைவிட கோப்பைகளே இங்கு பேசப்படும். கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையும் வென்றிடாத நிலையில், கேப்டன் பொறுப்பில் இருக்கும் அவருக்கு அழுத்தம் அதிகமாகியிருக்கும். கோப்பைகளை ஓடி அணியை வழிநடத்திச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு கோலி தள்ளப்பட்டிருப்பார்.


2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி, ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை அரை இறுதி,  2019-2020 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என முக்கிய தொடர்களில் கோலியின் படை சோபிக்கத் தவறியது பெரும் மைனஸாக அமைந்துள்ளது. 


அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணிக்கு கோப்பையைப் பெற்று தர முடியாததால் கோலியின் கேப்டன்சி மீதான விமர்சனம் வலுக்க தொடங்கியது. ஆனால், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஐந்து முறை ஐபிஎல் டிராபியை வென்று மிகவும் வெற்றிகரமான ஐபிஎல் அணி என்ற இடத்தை தக்க வைத்துள்ளது. 

 

டெஸ்ட், ஒரு நாள், டி-20 என அனைத்து ஃபார்மேட்களிலும், இந்திய அணியின் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக வலம் வரும் கோலி, இனி பேட்டிங்கில் கவனம் செலுத்த, கேப்டன்சி பொறுப்பை பகிர்ந்தளித்தது அவருக்கும் நல்லது, இந்திய அணிக்கும் சாதகமான முடிவாகவே அமையும். 

டி-20 கேப்டனாக ரோஹித்:


ரோஹித் ஷர்மா கேப்டன்சியைப் பொருத்தவரை, 19 போட்டிகளில் இந்திய அணி அவர் தலைமையின் கீழ் டி-20 விளையாடியுள்ளது. இதில், 15 போட்டிகள் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது இந்திய அணி. வெற்றி சதவிகிதம் - 78.94



டி-20 உலகக்கோப்பை போன்ற பெரிய தொடருக்கு பிறகு, ஃப்ரெஷாக இந்திய அணியின் தலைமை மாற்றப்படுவது அணியினருக்கு அடாப்ட் செய்து கொள்ள ஏதுவாகவே அமையும். ஐபிஎல் போன்ற டி-20 தொடரில் ரோஹித் வென்று குவித்து வந்த கோப்பைகளை இனி இந்திய அணியின் பெயரில் வென்று காட்டுவார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனினும், கோப்பைகளை எதிர்ப்பார்த்து கோலியை டார்கெட் செய்தது போல ரோஹித்தை டார்கெட் செய்யாமல் இருந்தாலே, எல்லாம் நன்மையில் முடியும் என்பதை நம்புவோம்.