இந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவில் வந்து விளையாடியது. ஆனால், அந்த அணி விளையாடிய 9 லீக் போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 5 போட்டிகளில் பரிதாப தோல்வியை சந்தித்தது.


இதனால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் விரக்தி அடைந்தனர்.  இச்சூழலில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த நவம்பர் 15 ஆம் தேதி பாபர் ஆசாம் அறிவித்தார். 


இமாத் வாசிம் ஓய்வு:


இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 24) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சமீபத்திய நாட்களில் நான் எனது சர்வதேச வாழ்க்கையைப் பற்றி நிறைய யோசித்து வருகிறேன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எனது ஓய்வை அறிவிக்க இதுவே சரியான நேரம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். பல  ஆண்டுகளாக பிசிபி அளித்த அனைத்து ஆதரவிற்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்துவது உண்மையிலேயே ஒரு மரியாதை.


இதுவே சரியான நேரம்:


ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் நான் விளையாடிய 121 போட்டிகளில் எனக்கு ஒரு கனவை போன்றது. பாகிஸ்தான் அணிக்கு வரவிருக்கும் புதிய பயிற்சியாளர் மற்றும் தலைமை முன்னோக்கி செல்வதற்கு இது ஒரு சரியான நேரம். இதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஒவ்வொரு வெற்றியை விரும்புகிறேன், மேலும் நமது அணி சிறந்து விளங்குவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.






மேலும், “பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எப்போதுமே இதுபோன்ற ஆர்வத்துடன் ஆதரவளித்து வருவதற்கு நன்றி. நான் மிகவும் உயர்ந்த இடத்திற்கு சென்று சாதிக்க உதவிய எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கடைசியாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது அடுத்த கட்டத்தில் கவனம் செலுத்த காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


முன்னதாக , இமாத் வாசிம் 55 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 40 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ளார். இதில் 986 ரன்கள் எடுத்துள்ள அவர் 6 அரைசதம் அடித்துள்ளார். அதேபோல், 55 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 53 இன்னிங்ஸ்கள் பந்து வீசியுள்ள இவர் 44 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.


மேலும், சர்வதேச அளவில் 66 டி 20 போட்டிகளில் 44 இன்னிங்ஸ்களில் 486 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 65 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார் இமாத் வாசிம். இவர் கடைசியாக கடந்த 2020 நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும், கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.