தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுவதாக இழந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

Continues below advertisement

தொடரை இழந்த இந்தியா

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்யாசத்திலும், கௌகாத்தியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் சொந்த மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியில் தோல்வி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. 

இப்படியான நிலையில் இந்திய அணியின் மோசமான தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த தொடரை இழந்ததன் மூலம் இந்திய அணி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இந்தியாவை முந்திய பாகிஸ்தான்

கடைசியாக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு அடுத்த சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 4 வெற்றி, 4 தோல்வி, ஒரு ட்ரா என 52 புள்ளிகளைப் பெற்று 5வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி தான் அதிக போட்டிகளில் விளையாடி உள்ளது.

முதலிடத்தில் ஆஸ்திரேலியா, இரண்டாவதாக தென்னாப்பிரிக்கா, மூன்றாவதாக இலங்கை, நான்காவதாக பாகிஸ்தான் இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே ஒரு தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா, நான்கு போட்டிகளில் 36 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா தனது நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் முதல் தொடர் தோல்வி இதுவாகும். இதனால் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் தலைமை குறித்து கேள்வியும், விமர்சனமும் எழுந்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரை மட்டுமே இந்திய அணி கைப்பற்றியது. அதேசமயம் இந்திய அணி வீரர்களும் சொந்த மண்ணில் கூட சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருவது கடும் கோபத்தை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.