ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை இந்தியாவில் நடைபெற இருந்தது. எனினும் இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் குறையாத சூழலில் இந்தப் போட்டிகளை யுஏஇயில் நடத்த ஐசிசி திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்தியாவில் நடத்துவது தொடர்பாக பிசிசிஐ இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. 


இந்நிலையில் டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முதல் யுஏஇயில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி முடிந்த அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு இரண்டு நாள் கழித்து டி20 உலகக் கோப்பை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி வரும் நவம்பவர் மாதம் 14ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தகவலை பிரபல கிரிக்கெட் தளமான ‘ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ’ வெளியிட்டுள்ளது. 




அதன்படி இம்முறை குரூப் போட்டிகள் வரும் அக்டோபர் 24ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 3 பிளே ஆஃப் போட்டிகள் மற்றும் இரண்டு அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துவது தொடர்பாக ஜூன் கடைசி வாரம் வரை பிசிசிஐக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே பிசிசிஐயின் அதிகாரப்பூர்வு அறிவிப்பிற்கு பிறகு இறுதியான அட்டவணை வெளியாகும் என்று கருதப்படுகிறது. 


தொடரும் டெயில்-எண்ட்டர்ஸ் பேட்டிங் சொதப்பல்.. சுதாரிக்குமா இந்தியா அணி?


ஏற்கெனவே டி20 உலகக் கோப்பையை அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் ஓமானில் போட்டிகளை நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தது. அக்டோபர் முதல் வாரம் வரை யுஏஇ யில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால், டி20 தொடரின் முதல் லெக் போட்டிகள் ஓமானி நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. அப்போது தான் யுஏஇயில் உள்ள மூன்று ஆடுகளங்களையும் சீரமைக்க சற்று நேரம் கிடைக்கும். அதன்பின்னர் 2-வது லெக் போட்டிகளை யுஏஇயில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.  




இம்முறை டி20 உலகக் கோப்பை தொடரில் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. அதில் சில சிறிய நாடுகளின் கிரிக்கெட் அணிகளும் உள்ளன. இதனால் ஒருவேளை ஒரு அணியில் யாராவது ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அந்த நாடுகளில் மாற்று வீரர் கிடைப்பது மிகவும் கடினம். எனவே இப்படி ஒரு சூழலில் இந்தியாவில் டி20 உலகக் கோப்பையை ஐசிசி நடத்தக் கூடாது என்று அசோசியேட் நாடுகளின் கிரிக்கெட் சங்க கூட்டமைப்பு ஐசிசியிடம் கருத்து தெரிவித்துள்ளது. ஆகவே அதையும் ஏற்கும் வகையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை யுஏஇ மற்றும் ஓமானில் நடத்த அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் அக்டோபர் முதல் வாரம் பல நாடுகளின் வீரர்கள் ஐபிஎல் தொடருக்காக யுஏஇயில் இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு டி20 உலகக் கோப்பையையும் அங்கு நடந்தால் அது நல்லதாக தான் அமையும் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


 


மேலும் படிக்க: 2ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் அட்டவணை அறிவிப்பு !