அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை டி20 தொடர் நவம்பர் 14-ம் தேதி நிறைவடைகிறது. இதற்கான அட்டவணை, பிரிவுகள் அனைத்து வெளியிடப்பட்ட நிலையில், இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பாப்பு ரசிகர்களிடையே எழுந்தது. 


இந்நிலையில்,டி-20 உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் அணியின் இடம் பிடித்திருப்பது நம்பிக்கையை அளிக்கிறது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில், துணை கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்‌ஷர் பட்டேல், சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், வருண் சக்கரவர்த்தி, ராகுல் சஹார் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.






34 வயதயான அஷ்வின், கடைசியாக 2017-ம் ஆண்டில்தான் வொயிட் பால் கிரிக்கெட் விளையாடியுள்ளார். எனினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமான பந்துவீச்சாளராகவும், ஐபிஎல் தொடரில் தவிர்க்க முடியாத வீரராகவும் தன்னை கிரிக்கெட்டில் ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். “அஷ்வின் இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம். வாஷிங்கடன் சுந்தருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அனுபவம் வாய்ந்த ஆஃப்-ஸ்பின்னரான அஷ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என்று இந்திய அணி தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா தெரிவித்துள்ளார்.


இந்திய அணி விவரம் வெளியான சில மணி நேரங்களிலேயே, அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவு பகிர்ந்திருந்தார். அதில், "2017: இந்த வரிகளை என்னுடைய வீட்டுச்சுவற்றில் வரைவதற்கு முன்பு, பல முறை எனது டைரியில் குறிப்பிட்டுள்ளேன். நாம் விரும்பும், பின்பற்ற நினைக்கும் வரிகளுக்குத்தான் எவ்வளவு வலிமை. மகிழ்ச்சியையும், நன்றியையும் தவிர வேறென்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை” என பதிவிட்டிருந்தார்.



46 சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாடி இருக்கும் அஷ்வின், 52 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இப்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்திருக்கும் அஷ்வின், டி-20 உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.