சர்வதேச ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் டாப் 10 பவுலர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.  இந்திய பவுலர் ஒருவர் மட்டுமே இதில் இடம்பிடித்துள்ளார்.


டாப் 10 பந்துவீச்சாளர்கள் பட்டியல்


1. டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து)


2. மெஹதி ஹாசன் மிராஸ் ( வங்கதேசம்)


3.முஜீப் உர் ரஹ்மான் (ஆப்கானிஸ்தான்)


4. மேட் ஹென்றி (நியூசிலாந்து)


5. ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா)


6. ககிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா)


7. கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து)


8. ஜோஸ் ஹாசில்வுட் (ஆஸ்திரேலியா)


9. முஸ்தாபிசுர் ரஹ்மான் (வங்கதேசம்)


10. பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)


இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய இரண்டு வங்கதேச பவுலர்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். மெஹதி ஹாசன் மிராஸ் ( வங்கதேசம்) மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம், வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் பவுலர்களின் ரேங்க் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்த மூன்றாவது வீரர் என்ற சிறப்பை மெஹதி ஹாசன் மிராஸ் பெற்றுள்ளார். இந்திய அணியில் பும்ரா மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடியது. தனது திருமணத்திற்காக அந்தத் தொடரில், பும்ரா இடம்பெறவில்லை. அதில், அவர் இடம்பிடித்திருந்தால் ரேங்க் பட்டியலில் முன்னேறி இருக்கலாம்.


 



டாக்காவில் இலங்கை - வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இரண்டு போட்டிகளிலும் வென்று வங்கதேசம் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டிகளில் வங்கதேசத்தின் வெற்றிக்கு பவுலர்கள் சிறப்பாக பந்துவீசியதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதில், சிறப்பாக செயல்பட்டதால் அந்த அணியில் இரண்டு பவுலர்கள் டாப் 10 பவுலர்கள் ரேங்க் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக் டாக்காவில் இன்று மதியம் தொடங்குகிறது. 


முன்னதாக, கடந்த மே 18ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளில் இலங்கை பந்துவீச்சாளர்கள் இசுரு உதானா, ஷிரான் பெர்னாண்டோ மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் சமிந்தா வாஸ் ஆகியோருக்கு முடிவுகள் பாசிட்டிவ் என வந்தது. இதனால் திட்டமிட்டபடி முதல் ஒருநாள் போட்டி நடைபெறுமா அல்லது நடைபெறாதா என்ற கேள்விக்குறி எழுந்தது. சரியாக டாஸ் போடுவதற்கு 1 மணிநேரம் முன்பாக இரண்டாவது பரிசோதனை முடிவுகள் வந்தது. அதில் இலங்கை வீரர்கள் இசுரு உதானா, சமிந்தா வாஸ் ஆகிய இருவருக்கும் முடிவுகள் நெகட்டிவ் என வந்தது. ஆனால் மற்றொரு வீரர் ஷிரான் பெர்னாண்டோவிற்கு இரண்டாவது முடிவு பாசிட்டிவ் என வந்ததால், அவர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டார்.  இதனால் திட்டமிட்டபடி போட்டிகளை நடத்த போட்டி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்து, முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.