தமிழகத்தில் எப்படி எம்.ஜி.ஆரோ... ஆந்திராவில் அப்படி தான் என்.டி.ஆர்., சினிமாவில் துவங்கி அரசியலில் ஆர்ப்பரித்த என்.டி.ஆர்., பெயர் தான் இன்றும் ஆந்திராவில் மாஸ். கடந்த 93 ஆண்டுகளுக்கு முன் 1928 மே 28 இதே நாளில் தான் பிறந்தார் என்.டி.ராமராவ்.




புது அவதாரம் எடுத்த என்.டி.ஆர்.,


நடிகர், இயக்குனர், அரசியல்வாதி என பலவற்றில் ஜொலித்தவர் என்.டி.ஆர். அவரது காலம், ஆந்திரா சினிமா உலகின் பொற்காலம் எனப்பட்டது . 1947 ல் காவல் துறை அதிகாரி வேடத்தில் தனது சினிமா பயணத்தை துவக்கிய என்.டி.ராமராவ், அதன் பின் அடுத்தடுத்த படங்களில் தெலுங்கு ரசிகர்களை கட்டிப்போடத்துவங்கினர். பாதாள பைரவி படம் தான் தெலுங்கிலும், தமிழிலும் என்.டி.ஆர்.,க்கு அடையாளம் தந்தது.


1952 ல் வெளியான கல்யாணம் பண்ணிப்பார் படத்திற்கு பின் தெலுங்கில் தனக்கான இடத்தை தக்க வைத்தார். மாயாபஜார் படத்தில் அவர் ஏற்ற கிருஷ்ணர் வேடம் தான், என்.டி.ஆர்., வாழ்வில் பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியது. அதன் பின் கிருஷ்ணர் வேடம் என்றாலே என்.டி.ஆர்., தான் என்கிற நிலை மாறியது. அதன்பின் கிருஷ்ணரே என்.டி.ஆர்., தான் என நம்பும் அளவிற்கு மக்கள் மனதில் பதிந்தார். கர்ணனில் எப்படி சிவாஜியை மறக்க முடியாதோ, அதே போல் தான் கிருஷ்ணராக நடித்த என்.டி.ஆர்.,யும் மறக்க முடியாது.இப்படி தான் மானசீகமாக மக்கள் மனதை சென்றடைந்தார் என்.டி.ஆர்.


எம்.ஜி.ஆர்., தான் ரோல்மாடல்




எம்.ஜி.ஆர் வழி தான் என்.டி.ஆர்., வழி. சினிமா என்றாலும் சரி, அரசியல் என்றாலும் சரி. தெலுங்கு தேசம் என்ற கட்சியை ஆரம்பித்து 9 மாதத்தில் ஆட்சியை பிடித்தவர் என்.டி.ராமராவ். ‛அண்ணன் எம்.ஜி.ஆர்., அறிவுரையால் தான் முதல்வரானேன்,’’ என வெளிப்படையாகவே அறிவித்தவர் என்டிஆர். எம்.ஜி.ஆர்., பாணியில் ஆந்திராவில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, பூரண மதுவிலக்கு, 2 ரூபாய்க்கு அரசு வழங்கும் திட்டம் போன்றவற்றின் மூலம் எளிய மக்களின் மனதில் இடம் பிடித்தவர் என்டிஆர்.


விருட்சகமாக என்.டி.ஆர்., போட்ட விதை!


நிறைய திருமணங்கள் செய்ததால் என்.டி.ஆர்., குடும்பம் பெரிது. வாரிசுகளும் அதிகம். தனது கலை வரிசாக 14 வயது மகன் பாலகிருஷ்ணாவை அறிவித்த என்டிஆர், 25வது வயதில் பாலகிருஷ்ணாவை அரசியல் வாரிசாக அறிவிக்க முயன்ற போது, அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவிக்க, வேறு வழியின்றி சினிமாவில் ஒதுங்கினார் பாலகிருஷ்ணா.  ரயில் பஞ்ச், குதிரை குஸ்தி, ஏரோப்பிளேன் எல்லாம் அடிச்சு பறக்க விடுவாரே அதே பாலகிருஷ்ணா தான். இன்று வரை தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு வசமும், சினிமா என்.டி.ஆர்., வாரிசுகள் வசமும் இருக்கிறது என்றால் அதற்கு விதை போட்டவர் என்.டி.ராமராவ் என்கிற ஒற்றை மனிதரே.


எல்லாம் கிருஷ்ண மயம்!




கிருஷ்ண பகவான் மீது தான் கொண்ட பக்தி காரணமாகவே தனது மகன்களுக்கு கிருஷ்ணா என்கிற பெயர் வரும் படி பெயர் சூட்டியிருப்பார் என்டிஆர். ஜெய கிருஷ்ணா, சாய் கிருஷ்ணா, ஹரி கிருஷ்ணா, மோகன் கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ராமகிருஷ்ணா, ஜெயசங்கர் கிருஷ்ணா என அனைத்து மகன்கள் பெயர்களிலும் கிருஷ்ணர் இடம்பெற்றிருப்பார். தெலுங்கு நடிகர் என்றாலும், கிருஷ்ணர் வேடம் தமிழிலும் என்டிஆர்-யை நிலைத்து நிற்க வைத்தது. மாயா பஜார், லவகுசா, கர்ணன், கண்ணன் கருணை, சண்டிராணி, திருடாத திருடன், பணம் படுத்தும் பாடு, பாதாள பைரவி போன்றவை என்.டி.ஆர்.,யின் எனி டைம் தமிழ் பேவரிட்.


பிரிந்தாலும் ஆந்திராவின் ஒன்றுபட்ட மனிதர்!




மூன்று முறை ஆந்திராவின் முதல்வர், தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் பிளாக் பஸ்டர் என அரசியல், சினிமாவில் கொடிகட்டிப்பறந்த என்.டி.ஆர்., தான் எனி டைம் ஆந்திராவின் சாய்ஸ். 1968 ல் பத்மஸ்ரீ பெற்ற நன்டமுரி தாரக ராமராவ் எனும் என்.டி.ஆர்., 1996 ஜனவரி 18 ல் காலமானார். அவர் அன்புக்கு கட்டுப்பட்ட ஆந்திரப்பிரதேசம் இன்று ஆந்திரா, தெலங்கனா என இரண்டாக பிரிந்திருந்தாலும், அங்குள்ள மக்களின் மனதில் ஒன்றாகவே இணைந்திருக்கிறார் என்.டி.ஆர். தலைமுறைகளை கடந்தும் என்.டி.ஆர்., பெயரில் அரசியல் நடக்கிறது, கலைத்துறை இயங்குகிறது என்றால் அது தான் என்.டி.ஆர்., எனும் மூன்று எழுத்து ஆந்திராவில் ஏற்படுத்திய அலை! அவரது 93வது பிறந்தநாள் இன்று, மக்கள் மனதில் என்றும் வாழ்பவர்களுக்கு ஏது இறப்பு.