ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது இந்திய அணி. இந்த ஆண்டிற்கான டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். அதில் முதல் இடத்தை இந்தியாவும், 2-வது இடத்தை நியூசிலாந்து அணியும் தக்க வைத்துள்ளனர்.






இந்திய அணி 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2914 புள்ளிகளைப் பெற்றுள்ளது, அதன் அடிப்படையில் 121 ரேட்டிங் பாயிண்ட்களுடன் முதலிடத்தில் உள்ளது இந்திய அணி. 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதும், 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதும் இந்திய அணிக்கு முதல் இடத்தை பெற உதவியுள்ளது. இந்திய அணிக்கு மிக அருகாமையிலேயே 120 ரேட்டிங் பாயிண்ட்களுடன் நியூசிலாந்து அணி உள்ளது. நியூசிலாந்து அணி 18 போட்டிகளில் விளையாடி 2166 புள்ளிகளைப் பெற்றுள்ளதன் அடிப்படையில் 2வது இடத்தை தக்க வைத்துள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகள் இரண்டும் இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜூன் 18 முதல் 22ம் தேதி வரை போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.


அதேநேரம் இங்கிலாந்து அணி தரவரிசை பட்டியலில் ஒரு இடம் முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணியை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது இந்திய அணி. மேலும் மேற்கிந்திய தீவுகள் அணியும் இரண்டு இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளது. பங்களாதேஷ் அணியுடன் 2-0 என்ற கணக்கில் பெற்ற வெற்றி 8வது இடத்தில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியை 6வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளது. 2013ஆம் ஆண்டிற்கு பிறகு மேற்கிந்தியத்தீவுகள் அணி வகிக்கும் சிறந்த தரவரிசை இதுவாகும்.


பாகிஸ்தான் அணி 5வது இடத்தில் நீடிக்கிறது, அண்மையில் 2-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியிருந்தது. அதேநேரம் தென்னாப்பிரிக்கா அணி தனது டெஸ்ட் வரலாற்றிலேயே மிக மோசமான ரேங்கிங்கை சந்திக்கிறது. 7வது இடத்தில தற்போது உள்ள தென்னாபிரிக்க அணியின் குறைந்த பட்ச தரவரிசை இதுவாகும்.


தென்னாப்பிரிக்க அணிக்கு கீழ் இலங்கை, பங்களாதேஷ், ஜிம்பாவே ஆகிய அணிகள் உள்ளன. இப்படியாக ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் ரேங்கிங் தரவரிசை பட்டியல் அமைந்துள்ளது.


ஐசிசி டெஸ்ட் தரவரிசை (மே 13, 2021)


1) இந்தியா 121 (+1)


2) நியூசிலாந்து 120 (+2)


3) இங்கிலாந்து 109 (+3)


4) ஆஸ்திரேலியா 108 (-5)


5) பாகிஸ்தான் 94 (+3)


6) மேற்கிந்திய தீவுகள் (+3)


7) தென்னாப்பிரிக்கா 80 (-9)


8) இலங்கை 78 (-5)


9) வங்கதேசம் 46 (-5)


10) ஜிம்பாப்வே 35 (+8)