ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இப்போட்டி ஜூன் 18ஆம் தேதி சவுதாம்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான விதிகளை தற்போது ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் போட்டிக்கு ஒரு ரிசர்வ் நாள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மழை காரணமாக ஒரு நாள் ஆட்டம் பாதித்தால், அடுத்த நாள் விரைவாக தொடங்குவது மாலையில் ஒரு மணி நேரம் வரை கூடுதலாக விளையாடுவது அனுமதிக்கப்படும். இந்த மாதிரி செய்ய முடியவில்லை என்றால் கூடுதலாக உள்ள ரிசர்வ் நாள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது. இந்த ரிசர்வ் நாளை பயன்படுத்துவது தொடர்பாக ஐந்தாவது நாளின் கடைசி ஒரு மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இதை மேட்ச் ரெஃபரி இரு நடுவர்களிடம் கலந்து ஆலோசித்து எடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் 5 நாட்களில் முடிவு எட்டப்படவில்லை என்றால் ரிசர்வ் நாள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று ஐசிசி தெளிவு படுத்தியுள்ளது.
அத்துடன் இந்தப் போட்டி டிரா அல்லது டையில் முடிவடைந்தால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் கூட்டாக வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று ஐசிசி கூறியுள்ளது. மேலும் பேட்ஸ்மேன் ரன் எடுக்கும் போது ஷாட் ரன் தொடர்பான முடிவு மூன்றாவது நடுவர் எடுப்பார். அதேபோல் எல்பிடபிள்யூ ரிவ்யூ செய்வதற்கு முன்பாக பேட்ஸ்மேன் ஷாட் விளையாடினாரா என்பதை பந்துவீச்சு கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் நடுவரிடம் கேட்டு கொள்ளும் முறையும் அமல்படுத்தப்பட உள்ளது. ரிவ்யூ முறையில் பந்தின் உயரம் தொடர்பான சிறிய மாற்றமும் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தற்போது மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வரும் ஜூன் 2ஆம் தேதி இந்தியாவிலிருந்து தனி விமானம் மூலம் இங்கிலாந்து செல்ல உள்ளனர். அதேபோல் நியூசிலாந்து வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களும் வரும் ஜூன் முதல் வாரத்தில் இங்கிலாந்து வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய விதிகளில் டிரா அடைந்தால் இரு அணிகளும் வெற்றியாளர் என்று அறிவிக்கும் முடிவை பலரும் எதிர்த்து வருகின்றனர். அது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கான சரியான முடிவாக இருக்காது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதால் இறுதிப் போட்டி மழை காரணமாக பாதிப்பு அடையும் சூழல் உருவாகும். இதனால் போட்டி டிரா ஆகும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது என்று வல்லுநர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். எனவே போட்டி ஒருவேளை டிராவில் முடிந்த்தால் ஐசிசியின் இந்த முடிவை சர்ச்சையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ஏற்கெனவே 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பவுண்டரி விதிமுறை மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.