அழுக்குத் துணியை நான் பொது இடத்தில் துவைப்பதில்லை என்று ரவிசாஸ்திரி பேசியிருப்பது விளையாட்டு உலகில் பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1க்கு 2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது. இதனையடுத்து டெஸ்ட் கேப்டன்ஷிப்பை துறப்பதாக விராட் கோலி அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆனால் அவரது முடிவை இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி வரவேற்றார். இதுபோன்று இதற்கு முன்னரும் நிறைய பெரிய ஆட்டக்காரர்கள் செய்துள்ளனர் என்றார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், இது அவருடைய தெரிவு. அதற்கு அனைவரும் மரியாதை தர வேண்டும். எல்லாவற்றிற்கும் நேரங்காலம் இருக்கிறது. இதற்கு முன்னரும் நிறைய பெரிய வீரர்கள் கேப்டன்ஷிப்பை உதறியுள்ளனர். பேட்டிங் இல்லை வேறு ஏதாவதில் கவனம் செலுத்த வேண்டி அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர் என்று கூறினார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய பின்னர், சாஸ்திரி கோலியின் பாடி லேங்குவேஜ் பற்றி ஏதும் விமர்சித்ததில்லை.
தெ.ஆப்பிரிக்க தொடர் பற்றி, நான் அந்த சீரிஸின் ஒரு பந்தை கூடப் பார்க்கவில்லை. ஆனால், விராட் கோலி பெரியளவில் மாற வேண்டும் என நான் நினைக்கவில்லை. நான் கிரிக்கெட் போட்டிகளை விடுத்து 7 வருடங்களுக்குப் பின்னர் அணியில் சேர்ந்தேன். ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். நான் எப்போதும் அழுக்குத் துணிகளை பொதுவெளியில் துவைப்பதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக உலகக் கோப்பையை வெல்லாததற்காக கோலி விமர்சிக்கப்பட்டதற்கும் சாஸ்திரி முட்டுக் கொடுத்தார்.
உலகக் கோப்பையை நிறைய வீரர்கள் வென்று கொடுத்ததில்லை. சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே இப்படி நிறைய பேர் சொல்லலாம். அதற்காக அவர்கள் திறனற்றவர்கள் என்று கூறுவதா?
எதையும் பொதுமைப்படுத்த முடியாது. சச்சின் டெண்டுல்கள் 6 உலகக் கோப்பை போட்டிகள் விளையாடிய பின்னரே கோப்பையை வெல்ல முடிந்தது என்றார்.
அதேபோல் பிசிசிஐ, கோலி சர்ச்சை குறித்த கேள்விக்கு இதில் எனக்கு நிறைய தகவல் இல்லை. தகவல் இல்லாத விஷயத்தில் அதிகம் கருத்து சொல்லாமல் இருப்பதே நல்லது என்றார்.
விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் உடன்பாடு தெரிவித்துள்ளார். மேலும் ஓரிரு ஆண்டுகள் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்திருக்கலாம் என்ற கருத்துடன் ஒத்துப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.