”பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். மல்யுத்த கோதாவுக்குச் செல்லக்கூடாது” எனப் பேசிய நபருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். அவரது விளாசல் வீடியோவைப் பகிர்ந்துள்ள பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி.


முன்னதாக ஜீ தொலைக்காட்சியில் வரவிருக்கும் நிகழ்ச்சியின் புரோமோ வெளியானது. அந்தப் புரோமோவில் பேசும் பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனப் பேசுகிறார். அவர் இதுபோல் பல்வேறு கருத்துகளையும் ஆண், பெண் பாலின பேதத்தை விரிவுபடுத்தும் வகையிலும் பேசியிருந்தார். இந்த வீடியோக்களுக்குப் பதிலளித்துள்ள மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், ஆண், பெண்ணும் சமமே. ஆண் செய்யும் அனைத்து வேலையையும் பெண்ணால் செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.


இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, தவ்ஜிக்கு சமீபகாலமாக அதிக வரவேற்பு இணையத்தில் கிடைக்கிறது. இவரைப் போல் பாலின பேதத்தை ஊக்குவிப்பவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அவரது பேச்சுக்கு பபிதா போகத் சரியான பதிலடி கொடுத்துள்ளார். உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம் பபிதா ஜி என்று பதிவிட்டுள்ளார்.


டங்கல் கொண்டாடிய போகத் சகோதரிகள்..


கடந்த 2016-ம் ஆண்டு ஆமீர்கான் நடித்த டங்கல் படத்தின் கருவே பபிபதா, கீதா போகத் சகோதரிகளும் அவரது தந்தை மஹாவீர் போகத்தும்தான். ஹரியானாவின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து ஆணாதிக்கம் நிறைந்த ஒரு விளையாட்டில் எப்படி தனது இரண்டும் மகள்களையும் சாதனை மங்கைகளாக ஒரு தந்தை மாற்றுகிறார் என்பதையே அந்தப் படம் கொண்டாடியிருக்கும். 


டங்கல் புகழ் பபிதா தான் இப்போது பாலின பேதத்துக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார். இவர், பாஜகவில் இணைந்துவிட்டார் என்பது கூடுதல் தகவல். நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய விசிறி. 2014-ல் இருந்து அவரின் தீவிர ரசிகையாக இருக்கிறேன் என்று பபிதா இணைப்பு விழாவில் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


காஷ்மீர் பெண்கள் பற்றி சர்ச்சைப் பேச்சு...


அண்மையில் காஷ்மீரிலிருந்து இனி பெண் எடுக்கலாம் என்று சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரை ஆதரித்து பபிதா பேசினார். பபிதா பேசுகையில் "ஹரியானா மாநிலத்தில் குறைந்துவரும் பாலின விகிதாச்சாரத்தைப் பற்றி பேசும்போதே முதல்வர் ஆண் - பெண் விகிதத்தை அதிகரிக்க இனி காஷ்மீரில் இருந்தும் பெண் எடுக்கலாம் என்று கூறினார். நம் காஷ்மீரின் மகள்களையும் சகோதரிகளையும் அவமதிக்கும் வகையில் அவர் ஏதும் கூறவில்லை. ஊடகங்கள்தான் அவரின் கருத்துகளைத் திரித்துவிட்டன" என்று பேசியிருந்தார்.


இதனால், பபிதாவுக்கும் எதிர்ப்பு கிளம்பியது நினைவுகூரத்தக்கது.