கால்பந்து விளையாட்டின் ஜாம்பவனான லியோனல் மெஸ்ஸிக்கு இன்று 35வது பிறந்தநாள் என்பதால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
லியோனல் மெஸ்ஸி 1987 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி லியோனல் ஆண்ட்ரஸ் மெஸ்ஸியாக புரட்சியாளர் சே குவேரா பிறந்த அர்ஜெண்டினாவின் ரோசாரியில் பிறந்தார். சிறுவயதாக இருக்கும் போது அவருக்கு வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு கண்டறியப்பட்டது. மாதத்திற்கு 900 டாலர் செலவாகும் என்பதால் மெஸ்ஸியின் பெற்றோர்களால் சிகிச்சையளிக்க முடியவில்லை.
1995 ஆம் ஆண்டு 7 வயதில் கால்பந்து கிளப்பில் விளையாடத் துவங்கிய நிலையில் தனது 11வது வயதில் மெஸ்ஸி எஃப்சி பார்சிலோனாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஸ்பெயினுக்குச் சென்றார். அவரது சிகிச்சைக்காக கால்பந்து கிளப் பணம் செலுத்தியது. அர்ஜெண்டினாவில் மெஸ்ஸி பிறந்திருந்தாலும் ஸ்பெயினின் பார்ஸிலோனாவிற்காகவே அவரது கால்கள் விளையாடின.
மெஸ்ஸி டிபண்டர்களை ஏமாற்றி கோல் அடிப்பதில் வல்லவர். 2001 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை பார்ஸிலோனா அணிக்காக விளையாடிய அவர் 2005 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார். பின்னர் சர்வதேச போட்டிகளில் எந்த அணிக்காக மெஸ்ஸி விளையாட போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து தனது தாய்நாடான அர்ஜெண்டினாவுக்காக விளையாட முடிவு செய்தார்.
அவரைப் பற்றி அதிகம் அறியப்படாத சில தகவல்களை கீழே காணலாம்..
- தனது சுறுசுறுப்பு மற்றும் வேகத்திற்காக மெஸ்ஸி 'தி பிளே' ( The Flea) என்று அழைக்கப்படுகிறார்.
- உலகின் பணக்கார கால்பந்து வீரர்களில் மெஸ்ஸியும் ஒருவராவார். கால்பந்து உலகின் மற்றொரு ஜாம்பவனான ரொனால்டினோ அவரை தனது இளைய சகோதரன் என கூறுவது வழக்கம்.
- பார்சிலோனாவுக்காக அவர் முதன் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அணியின் இயக்குநரான கார்லஸ் ரெக்சாச் காகிதம் கிடைக்காததால் ஒரு டிஷ்யூ பேப்பரில் ஒப்பந்தத்தை எழுதினார்.
- மெஸ்ஸி பார்சிலோனாவுக்காக விளையாடியபோது அவருக்கு 17 வயது ஆகியிருந்தது. இதன்மூலம் அந்த அணிக்காக விளையாடிய மூன்றாவது இளைய நபர் ஆவார்.
- அவர் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் நாட்டில் குடியுரிமை பெற்றுள்ளார்.
- கடந்த 2008 ஆம் ஆண்டு கால்பந்து வீரர் ரொனால்டினோவிடமிருந்து பார்சிலோனா ஜெர்சி எண் 10 ஐ பெற்று தனதாக்கிக் கொண்டார்.
- தனது முதல் FIFA விருதை 2009 ஆம் ஆண்டு மெஸ்ஸி பெற்றார்.
- ஸ்பெயின் கால்பந்து அணியில் சேர மெஸ்ஸியை ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு அணுகிய போது அவர் விளையாட மறுத்து விட்டார்.
- குழந்தைகளுக்கு சிறந்த கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அவர் மெஸ்ஸி அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார்.
- பார்சிலோனாவிலிருந்து வெளியேறிய பிறகு மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்