கடந்த மாதம் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். அந்தத் தொடரில் கிரெனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் ஈட்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். 


 


இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற பின்பு இவர் தன்னுடைய நாட்டிற்கு திரும்பியுள்ளார். அங்கு அவர் ஒரு கப்பலில் பயணம் செய்துள்ளார். அந்த சமயத்தில் அவரை அங்கு இருந்த சிலர் கீழே தள்ளிவிட்டு காயப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தடகள ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 






இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோவை பார்த்து பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தத் தாக்குல் தொடர்பாக கிரெனடா நாட்டு காவல்துறையினர் சிலரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தெளிவான தகவல் எதையும் வெளியிடவில்லை. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த தடகள வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸூக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அவருடைய உயிரிக்கு எந்தவித ஆபத்துமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 


இது தொடர்பாக கிரெனடா நாட்டின் ஒலிம்பிக் கமிட்டி தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த கமிட்டியின் அறிக்கையில், “கிரெனடா நாட்டின் தேசிய ஐகான் வீரரான ஆண்டர்சன் பீட்டர்ஸை 5 மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்தத் தாக்குதலில் பீட்டர்ஸூக்கு எந்தவித பெரிய காயமும் இல்லை என்று தெரிந்து கொண்டோம். 


 






இது போன்ற சம்பவங்களை கிரெனடா நாட்டு மக்கள் எப்போதும் நடக்க அனுமதிக்க மாட்டார்கள். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும். மேலும் ஆண்டர்சன் பீட்டர்ஸ் முழுமையாக குணமடைய தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த இக்கட்டான சூழலில் கிரெனடா நாட்டு ஒலிம்பிக் கமிட்டி அவருக்கு துணை நிற்கும்” எனத் தெரிவித்துள்ளது. 


 


உலக ஈட்டி எறிதல் சாம்பியன் மீது இப்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தடகள உலகை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண