44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி வண்ணமயமான தொடக்க விழாவுடன் தொடங்கியது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்தார். அதில் அவருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.
மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட செஸ் ஒலிம்பியாட் தொடர் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இதைடுத்து, சென்னையில் நடந்த இந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் குறித்து இன்றளவும் பல்வேறு நாடுகள் புகழ்ந்து பேசி வருகின்றன.
இந்தநிலையில் ’கிராண்ட் மாஸ்டர்' பிரக்ஞானந்தா இன்று அதிகாலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில், ”இன்று எனது 12ம் வகுப்பு தேர்வில் ஆங்கில தேர்வுக்கான கேள்வித்தாளை கொடுத்தார்கள். இந்த கேள்வி வந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்” என குறிப்பிட்டு இருந்தார்.
அந்த கேள்வியானது என்னவென்றால், ”மாமல்லபுரத்தில் 4 செஸ் ஒலிம்பியாட் எப்படி நடத்தப்பட்டது என்பதை விவரித்து வெளிநாட்டில் படிக்கும் உங்கள் நண்பருக்கு கடிதம் எழுதுங்கள்.” என அந்த கேள்வித்தாளில் இடம் பெற்றிருந்தது.
இதேபோல், 2023 UPSC தேர்விலும் செஸ் ஒலிம்பியாட் குறித்த கேள்வி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்படியென்ன சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் இது..!
இந்தியாவின் முதல் முறையாக அதுவும், சென்னையில் கடந்த ஆண்டு 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடத்தப்பட்டது. இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் இதுவரை நடைபெற்ற எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் இல்லாத அளவிற்கு 187 நாடுகளின் வீரர்கள் பங்கேற்றனர்.
மொத்தமாக, 188 அணிகள் ஓபன் பிரிவிலும், 162 அணிகள் பெண்கள் பிரிவிலும் கலந்து கொண்டன. செஸ் ஒலிம்பியாட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் ரஷ்யா மற்றும் சீனா இம்முறை கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.
இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் உஸ்பெஸ்கிஸ்தான் நாடு 19 புள்ளிகளுடன் முதல் இடத்தினை பெற்று தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியது. தொடர்ந்து, 19 புள்ளிகளுடன் அர்மோனியா அணி இரண்டாவது இடத்தினைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியா பி அணி மூன்றாவது இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. இந்திய அணிகளைப் பொறுத்தவரை பெண்கள் பிரிவிலும், ஓபன் பிரிவிலும் மூன்றாவது இடத்தை பெற்றது. அதிலும் குறிப்பாக செஸ் ஒலிம்பியாட் தொடரில், இந்திய பெண்கள் அணி பதக்கம் வெல்வது இதுதான் முதல் முறை என்பது கூடுதல் சிறப்பான நிகழ்வாக உள்ளது.