தமிழகத்தை உலுக்கிய பல்லாயிரம் கோடி ஆருத்ரா மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்

 

தமிழகத்தை உலுக்கிய நிதி நிறுவன மோசடிகள்

 

சென்னை ( Chennai ) : ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம்,  1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் மாலதி, மைக்கேல் ராஜ், ராஜ செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த மோசடியில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு துணை தலைவராக இருக்கும் ஆர்.கே.சுரேசுக்கும், பா.ஜ.கவின் நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்பிருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது

 



சொத்துக்கள் முடக்கம்

 

மோசடி செய்யப்பட்ட பணத்தில் இதுவரை ரொக்கமாக 5 கோடியே 69 லட்சம் ரூபாயும், 1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் முடக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களின் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்களும் ,  கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஏஜென்ட்கள் நிர்வாக இயக்குனர்கள் ஆகியோரின் சொத்துக்களை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

 

பணத்தை திருப்பிக் கொடுத்த நடவடிக்கை

 

ஆருத்ராவில் முக்கிய ஏஜென்ட்களாக பணியாற்றியவர்களின் பட்டியலை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சரி பார்த்து சுமார் 2000 பேர் வரை ஏஜெண்டர்களாக பணியாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இவற்றில் 200 ஏஜெண்டுகள் பல கோடி ரூபாய்களை முதலீடுகளாக பெற்று, ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததும் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். முதல்கட்டமாக அதிக பணம் வசூலித்த 200 பேரை கண்டறிந்து தேவை ஏற்பட்டால் அவர்களை கைது செய்யவும், அதிக பணம் வசூலித்த 200 முகவர்களிடம் 30% பணத்தை திரும்ப பெற வாய்ப்பு உள்ளதாகவும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.



 

குற்றப்பத்திரிகை தாக்கல்

 

இந்த நிலையில், இந்த வழக்கில் டான்பிட் நீதிமன்றம் எனப்படும் தமிழ்நாட்டு முதலீட்டார்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.பாபு குற்றப்பத்திரிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர் டி. பாபு தாக்கல் செய்த 50 பக்க அளவிலான குற்றப்பத்திரிக்கையில், முதற்கட்டமாக 360 புகார்களில் தொடர்புடைய 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

3,000 பக்கம் அளவிலான கூடுதல் ஆவணங்கள்

 

மேலும் இந்த வழகிற்கு தொடர்புடைய 3,000 பக்கம் அளவிலான கூடுதல் ஆவணங்களை ஒரு நாட்களில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இவற்றை நீதிபதி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி, இவற்றின் நகலையும் அவர்களுக்கு வழங்குவார். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் நிலுவையில் உள்ள 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 புகார்கள் குறித்த விசாரணை நடத்திய பிறகு கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.