தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, விளையாட்டுத் துறையில் சாதித்ததற்காக வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கோவாவைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனையான பக்தி குல்கர்னியும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர்களது பெயர்களை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பரிந்துரைத்தது.
பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்ததற்காக அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் இதோ..
சீமா புனியா (தடகளம்), எல்தோஸ் பால் (தடகளம்), அவினாஷ் சேபிள் (தடகளம்), லக்ஷ்யா சென் (பேட்மிண்டன்), எச்எஸ் பிரணாய் (பேட்மிண்டன்), அமித் பங்கல் (குத்துச்சண்டை), நிகத் ஜரீன் (குத்துச்சண்டை), பக்தி குல்கர்னி (சதுரங்கம்), ஆர்.பிரக்ஞானந்தா (செஸ்), டீப் கிரேஸ் எக்கா (ஹாக்கி), சுஷிலா தேவி (ஜூடோ), சாக்ஷி குமாரி (கபடி), நயன் மோனி சைகியா (லான் பவுல்ஸ்), சாகர் ஓவல்கர் (மல்லகம்பம்), இளவேனில் வாளரிவன் (துப்பாக்கி சுடுதல்), ஓம் பிரகாஷ் மிதர்வால் (துப்பாக்கி சுடுதல்), ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்), விகாஸ் தாக்கூர் (பளு தூக்குதல்), அன்ஷு மாலிக் (மல்யுத்தம்), சரிதா மோர் (மல்யுத்தம்), பர்வீன் (வுஷு), மனாஷி ஜோஷி (பாரா பேட்மிண்டன்), தருண் தில்லான் (பாரா பேட்மிண்டன்), ஸ்வப்னில் பாட்டீல் (பாரா நீச்சல்) , ஜெர்லின் அனிகா ஜே (காதுகேளாதோருக்கான பேட்மிண்டன்).
நீதிபதி (ஓய்வு) ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான தேர்வுக் குழு, புகழ்பெற்ற மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு மூத்த டேபிள் டென்னிஸ் நட்சத்திரமான சரத் கமல் பெயரைப் பரிந்துரை செய்துள்ளது. 40 வயதான தமிழக வீரர் சரத் கமல், 2020ல் மனிகா பத்ராவுக்குப் பிறகு, மிக உயர்ந்த விளையாட்டு விருதைப் பெற்ற இரண்டாவது டேபிள் டென்னிஸ் வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் போட்டியில் மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் சரத் கமல் நாடு திரும்பினார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மனிகாவுடன் கலப்பு குழு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் சரத் கமல்.
இதற்கிடையில், பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் லான் பவுல் அணியில் இடம்பிடித்த நயன்மோனி, இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே அஸ்ஸமைச் சேர்ந்த வீராங்கனை ஆவார்.
சமீபத்தில் பரிசு உயர்த்தப்பட்டது. அதன்படி, கேல் ரத்னா விருது ரூ. 25 லட்சமும், அர்ஜுனா விருது ரூ. 15 லட்சமும், துரோணாச்சார்யா விருதுக்கு ரூ. 10 லட்சமும், வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ரூ. 15 லட்சமும் ரொக்கப் பணமாக உள்ளது. தனி வாழ்நாள் சாதனை விருது ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசையும் கொண்டுள்ளது.