ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடியது. 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.


ஒருநாள் தொடரின்போது இந்திய அணி முதல் இரு போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்றியதால் மூன்றாவது ஒருநாள் இந்திய அணி சார்பில் 5 வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அதேபோல, டி20 தொடரின்போது இந்திய வீரர் குருணல் பாண்ட்யாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட காரணத்தால் 8 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால், கடைசி இரு டி20 போட்டிகளிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.




அவ்வாறு ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சக்காரியா அறிமுகப்படுத்தப்பட்டார். இறுதி டி20 போட்டியில் இந்திய அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்திய அணிக்காக களமிறங்கிய சேத்தன் சக்காரியாவிற்கும், சந்தீப் வாரியருக்கும் வேகப்பந்து வீச்சு ஜாம்பவானும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மெக்ராத் வாழ்த்து கூறியுள்ளார்.






இதுதொடர்பாக, மெக்ராத் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய அணிக்காக அறிமுகமாகிய சேத்தன் சக்காரியா மற்றும் சந்தீப்வாரியருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள். உங்கள் இருவரையும் கண்டு பெருமையாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.


இந்திய வீரர்கள் வேகப்பந்துவீச்சில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக மெக்ராத் தலைமையில் எம்.ஆர்.எப். வேகப்பந்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மூலம் மெக்ராத் பல இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். சேத்தன் சக்காரியாவும், சந்தீப் வாரியரும் சென்னையில் இயங்கி வரும் மெக்ராத்தின் எம்.ஆர்.எப். அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்கள். தன்னுடைய மாணவர்கள் இந்திய அணியில் இடம்பிடித்ததற்காக மெக்ராத் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.




சக்காரியா தனியார் விளையாட்டு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், எம்.ஆர்.எப். பயிற்சி அகாடமியில் பயிற்சி எடுத்தபோது மெக்ராத் என்னுடைய பந்துவீச்சு திறன் வளர்வதற்கு பெரிதும் உதவினார். அவரது அறிவுத்தலினால் என்னால் லைன் மற்றும் லென்த்தில் பந்துவீச முடிந்தது என்றார். மற்றொரு வீரரான சந்தீப் வாரியர் மெக்ராத்தின் பயிற்சியினால் பந்துவீசும்போது எனது வேகம் 5 கிலோமீட்டர் அதிகரித்து தற்போது 130 கிலோமீட்டர் வேகத்தில் வீச முடிகிறது என்றார்.


இலங்கை தொடரில் அறிமுகமான சேத்தன் சக்காரியா 34 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், இரு டி20 போட்டிகளில் ஆடி 1 விக்கெட்டை கைப்பற்றினார்.