கிரிக்கெட் என்னும் விளையாட்டின் கடவுள் என்று போற்றப்படும் ஒரு நபர் - இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இந்தியா மட்டுமில்லை, இவருக்கு உலகெங்கிலும் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் உண்டு. அதற்கு முக்கிய காரணம் இவரின் பேட்டிங் ராஜபாட்டை. ஒருநாள் போட்டிகளில் 18463 ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் 15921 ரன்கள் என சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 34000 ரன்களை விளாசியுள்ளார். மேலும் சதத்திலேயே சதம் அடித்தும் சச்சின் சாதனை படைத்தவர். இப்படி சச்சின் கிரிக்கெட் உலகில் செய்துள்ள சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
மேலும் அறிய : இரண்டே வார்த்தைகளில் தோனியுடனான தனது உறவை விவரித்த விராட் கோலி!
2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் தனது ஓய்வை அறிவித்தார். நீண்ட நெடிய 24 வருட கிரிக்கெட் பயணத்தில் 600கும் அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடி, வெற்றி தோல்வி என அனைத்தையும் பார்த்துள்ள சச்சின் தற்போது இந்த இரண்டு விஷயம் நடைபெறாமல் போய்விட்டதே என வருத்தம் தெரிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி என்ன நடைபெறாமல் போனது சச்சினுக்கு ?
இது குறித்து மனம் திறந்துள்ள சச்சின் "எனக்கு இரண்டு வருத்தங்கள் உண்டு. முதலாவது என்னுடைய சிறு வயது ஹீரோவான சுனில் கவாஸ்கருடன் அணியில் சேர்ந்து விளையாடியதில்லை, அவருடன் விளையாட முடியாமல் போனது எனக்கு வருத்தம்" என தெரிவித்துள்ளார். சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைப்பதற்கு 2 வருடம் முன்பே சுனில் கவாஸ்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது இரண்டாவது வருத்தமாக "என்னுடைய குழந்தை பருவ ஹீரோ, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் எதிராக சர்வதேச கிரிக்கெட்டிலில் என்னால் விளையாட முடியாமல் போய்விட்டது, அதிர்ஷ்டவசமாக நாங்கள் இருவரும் கவுண்டி கிரிக்கெட்டில் எதிரெதிரில் விளையாடி உள்ளோம், ஆனால் 1991-இல் ரிச்சர்ட்ஸ் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இரண்டு ஆண்டுகள் இருவருமே சர்வதேச கிரிக்கெட்டில் பயணித்தும், என்னால் அவருக்கு போட்டியாக சர்வதேச போட்டியில் விளையாட முடியாமல் போய்விட்டது என்பது வருத்தமானது" என சச்சின் தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்று ஏறக்குறைய 8 ஆண்டுகள் ஆன நிலையில், அனைத்தையும் சாதித்த சச்சின் தனக்கும் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறிய வருத்தங்கள் உண்டு என்பதை வெளிப்படுத்தியுள்ளார். கிரிக்கெட் களத்தில் சச்சின் ஆசை நிறைவேறாத நிலையிலும் வாழ்வில் சச்சின், சுனில் கவாஸ்கர், விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய அனைவருமே சிறந்த நண்பர்கள்.