இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். மிகச்சிறந்த இடது கை பேட்ஸ்மேனான கவுதம் கம்பீர் 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக, விறைப்பான முகத்துடன் காணப்படும் கவுதம் கம்பீர் தான் அழுதது குறித்து மனம் திறந்து பேசினார்.


இரவு முழுவதும் அழுதேன்:


அவர் கூறியதாவது, “ 1992ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த போட்டியில் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த இரவு முழுவதும் நான் அழுதேன். ஏனென்று தெரியவில்லை. அதற்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி நான் அது போல அழுததே இல்லை.  


அப்போது எனக்கு 11 வயதே ஆகியிருந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு நான் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். 1992ம் ஆண்டு உருவான என் கனவை 2011ம் ஆண்டு நிறைவேற்றிக் கொண்டேன். அந்த போட்டிக்கு முன்பும், பின்பும் நான் மகிழ்ச்சியற்ற தருணங்களை உணர்ந்திருக்கிறேன். ஆனால், அதுபோல நான் அழுததே கிடையாது.”


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


1 ரன்னில் தோற்ற இந்தியா:


கவுதம் கம்பீர் குறிப்பிட்ட அந்த போட்டியில் பிரிஸ்பேனில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக டீன் ஜோன்ஸ் 90 ரன்கள் எடுத்திருப்பார். கபில்தேவ் மற்றும் மனோஜ் பிரபாகர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.


இதையடுத்து, ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் இந்திய அணிக்கு 47 ஓவர்களில் 236 ரன்கள் என்று இலக்கு மாற்றப்பட்டது. இந்திய அணிக்காக முகமது அசாரூதின் 93 ரன்கள் குவித்திருப்பார். சிறப்பாக ஆடிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 47 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். இதனால், இந்திய அணி அந்த போட்டியில் 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுக்கும். இதனால், 1 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அந்த உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றது.


2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 275 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி சேவாக், சச்சின் விக்கெட்டை 31 ரன்களுக்குள் இழந்து தடுமாறிய நிலையில், கம்பீர் தனி ஆளாக போராடி ஆட்டத்தை மாற்றியிருப்பார். சிறப்பாக ஆடிய கம்பீர் அந்த போட்டியில் 97 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்திருப்பார். அந்த போட்டியில் தோனி அதிரடியாக ஆடி 91 ரன்களை எடுத்திருப்பார். இதனால், இந்திய அணி 10 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றது.