ஐபிஎல் தொடர் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது வரை 18 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று பெங்களூரு அணி முதலிடத்தில் உள்ளது. 3 போட்டிகளில் வெற்றி பெற்று சென்னை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் நடப்பு தொடரின் முதல் இரண்டு வாரங்களில் படைக்கப்பட்ட டாப்-5 சாதனைகள் என்னென்ன?
ஹர்பஜன் சிங்கின் 1250 டாட் பால்:
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக டாட் பால் வீசிய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்தான். இவர் இதுவரை 163 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1,268 டாட் பால்களை வீசியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடர் வரை 1249 டாட் பால் வீசியிருந்த ஹர்பஜன் சிங் நடப்பு தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு டாட் பால் வீசி 1250 என்ற சாதனையை படைத்தார். இந்தப் பட்டியலில் இவருக்கு அடுத்தப்படியாக ரவிச்சந்திரன் அஸ்வின் 1203 டாட் பால்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
600 பவுண்டரிகளை கடந்த ஷிகர் தவான்:
ஐபிஎல் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளவர் ஷிகர் தவான். இவர் கடந்த ஐபிஎல் தொடர் வரை 591 பவுண்டரிகள் அடித்திருந்தார். நடப்பு தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 92 ரன்கள் விளாசிய ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் 600 பவுண்டரிகளுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஷிகர் தவான் 180 ஐபிஎல் போட்டிகளில் 620 பவுண்டரிகள் விளாசியுள்ளார்.
350 சிக்சர்கள் விளாசிய கிறிஸ் கெயில்:
ஐபிஎல் தொடரில் சிக்சர் மன்னன் என்றால் அது நம் ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெயில்தான். இவர் தனது அசாத்திய பேட்டிங்கின் மூலம் பந்தை எளிதில் சிக்சருக்கு விரட்டும் திறன் கொண்டவர். கடந்த ஐபிஎல் தொடர் வரை இவர் 349 சிக்சர்கள் விளாசி இருந்தார். நடப்பு தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சிக்சர் அடித்து 350 சிக்சர்கள் விளாசி சாதனைப் படைத்தார். இவர் இதுவரை 137 போட்டிகளில் விளையாடி 354 சிக்சர்கள் அடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிகவும் குறைந்த போட்டிகளில் விளையாடி அதிக சிக்சர்கள் அடித்த ஒரே வீரர் கெயில் தான்.
தோனியின் 150 டிஸ்மிஸல்:
ஐபிஎல் தொடரில் பேட்டிங், விக்கெட் கீப்பிங், கேப்டன் என அனைத்து பிரிவிகளிலும் கலக்கிவரும் ஒரே வீரர் மகேந்திர சிங் தோனி தான். இவர் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 150 டிஸ்மிஸல் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதை நடப்பு தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் நிகழ்த்தி அசத்தியுள்ளார். தற்போது வரை ஐபிஎல் தொடர்களில் தோனி 111 கேட்ச்களையும், 39 ஸ்டெம்பிங்கும் செய்துள்ளார்.
விராட் கோலியின் 6000 ரன்கள்:
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் பெங்களூரு கேப்டன் விராட் கோலி தான். இவர் நடப்பு தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் அடித்து 6000 ரன்களை கடந்து அசத்தினார். இதுவரை 196 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி 6021 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் சுரேஷ் ரெய்னா 5448 ரன்களுடன் உள்ளார்.