மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 18-வது ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட் செய்ய கொல்கத்தா அணியை அழைத்தார்.
கடந்த போட்டியில் சென்னையின் இமாலய ஸ்கோரை துரத்திச்சென்ற கொல்கத்தா பேட்டிங் இந்த போட்டியிலும் வலுவாக இருக்கும் என்றே ரசிகர்கள் நம்பினர். ஆனால், தொடக்க ஆட்டக்காரர் நிதிஷ் ராணாவும், சுப்மன் கில்லும் நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கினர். ராணா 22 ரன்களுக்கும், கில் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடினர். ஆனால், சுனில் நரைன் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தார். அடுத்து களமிறங்கிய கொல்கத்தா கேப்டன் மோர்கன் எந்த பந்துகளையும் சந்திக்கமலேயே கிறிஸ் மோரிசால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் டக் அவுட்டான சோகத்தில் மோர்கன் வெளியேறினார்.
இதையடுத்து, அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த திரிபாதியும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை அடுத்து கடந்த ஆட்டத்தில் சென்னைக்கு கிலியை ஏற்படுத்திய ஆந்த்ரே ரஸல் இறங்கினார். அவர் 9 ரன்களுக்கு வெளியேற மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான பாட் கமின்ஸ் 10 ரன்களுக்கு வெளியேறினர். தினேஷ் கார்த்திக் மட்டும் 25 ரன்களை குவித்தார். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக 4 ஓவர்கள் வீசிய கிறிஸ் மோரிஸ் 23 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். உனத்கட், சக்காரியா, முஸ்தபிசிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதியில் கொல்கத்தா 133 ரன்களை மட்டுமே குவித்தது.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தானின் இன்னிங்சை ஜோஸ் பட்லரும், ஜெய்ஸ்வாலும் தொடங்கினர். ஆட்டத்தை அதிரடியாக தொடங்கிய பட்லர் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். சாம்சனும், ஜெய்ஸ்வாலும் இணைந்து அணியின் ஸ்கோரை இலக்கை நோக்கி கொண்டு சென்றனர். 17 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 22 ரன்களை எடுத்திருந்த ஜெய்ஸ்வால் சிவம்மவி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் ஷிவம்துபேவும் அதிரடியான ஆட்டத்தை வௌிப்படுத்தினார். துபே 18 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 22 ரன்களை எடுத்து வெளியேறினார். மறுமுனையில் கேப்டன் சஞ்சு சாம்சன் நேர்த்தியான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு அனுப்பினார். இதனால், சிங்கில்ஸ் மூலமாக ரன்களை சேர்த்தார்.
ராகுல் திவேதியா 3 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த டேவிட் மில்லர் அடுத்து விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார். இறுதியில் 18.5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 134 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் தொடர் தோல்விகளுக்கு ராஜஸ்தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய கிறிஸ் மோரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.