Formula 4 2Car Race: சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஃபார்முலா 4 கார்பந்தயம்:
கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார்பந்தயம், மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதாவது கடந்த டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் திட்டமிடப்பட்ட பந்தயம், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில், ஃபார்முலா 4 கார்பந்தயம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் மையப்பகுதியில் உள்ள, அண்ணா சாலையில் இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இதனை கடந்த ஆண்டே அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்தியன் ரேஸிங் சூப்பர் லீக் என்ற அமைப்பும் சேர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கு சென்னையில் ஃபார்முலா 4 கார்பந்தயம் நடத்த திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்பாடுகள் தீவிரம்:
இந்தியாவில் முதல்முறையாக ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 பந்தயம், சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடைவது போல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல்முறையாக இரவுப் போட்டியாக சாலை வழியாக நடத்தப்படு கார் பந்தயம் இது என்பதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். எனவே, இந்த போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்தது.
போட்டிக்கான கட்டண விவரம்:
போட்டிக்கான கட்டணமாக, “ப்ரீமியம் ஸ்டாண்ட் ஒரு நாள் டிக்கெட் கட்டணம் 3,999 ரூபாய், இறுதி நாட்களுக்கான டிக்கெட் கட்டணம் 6,999 ரூபாய், கிரான்ட் ஸ்டாண்ட் 1,2,3,4,5 டிக்கெட் கட்டணம் 1,999 ரூபாய், கிரான்ட் ஸ்டாண்ட் வார இறுதி நாட்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூபாய் 2,499 , Gold Lounge ஒரு நாள் டிக்கெட் கட்டணம் 7,999, வார இறுதி நாட்களில் Gold Lounge டிக்கெட்டின் விலை 13,999 ரூபாய்க்கும், Platinum Lounge கட்டணம் 12,999 மற்றும் வார இறுதி நாட்களில் 19,999 ரூபாய்” எனவும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.