மாநில அணிகளுக்கு தகுதிபெற்றால் போதும், ரஞ்சியில் விளையாடினால் போதும், ஐ.பி.எல்-இல் விளையாடினால் போதும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நம்மில் பலர் நம்பி வருகிறோம். ஆனால் வாழ்க்கை என்பது ரோலர் கோஸ்டர் பயணம் போன்றது. உயரத்தில் செல்லும் நாம் எப்போது கீழே விழுவோம் என்று தெரியாது. இதை உணராத பலர் அகலக்கால் எடுத்து வைத்து படுகுழியில் விழுந்து விடுகின்றனர்.


 


ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வீரர், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆடிய வீரர் தற்போது பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இலங்கை கிரிக்கெட் அணிக்காக 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகள், 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகள், 7 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் சூரஜ் ரந்திவ்.


இந்தியா கைப்பற்றிய 2011 உலக்கோப்பையை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய இலங்கையில் அணியில் இடம்பெற்றவர் சூரஜ் ரந்திவ். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட் சாதனை படைத்த ரந்திவ் தற்போது ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநர். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 சீசன்கள் விளையாடிய சூரஜ் ரந்திவ், 8 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.




சூழ்நிலை யாருடைய வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடும் என தெரியாது அல்லவா? அதுபோல் தான் சூரஜ் ரந்திவின் வாழ்க்கையும் தலைகீழானது. இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட அவருக்கு அடுத்தடுத்த ஐ.பி.எல். போட்டிகள், இதர லீக் போட்டிகளிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. போதிய வருவாய் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த அவர், வேறு வழியின்றி ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். தற்போது ரந்தவுக்கு 36 வயது கடந்துவிட்டாலும், கிரிக்கெட் விளையாடுவதை மட்டும் அவர் கைவிடவில்லை.


அங்குள்ள மாவட்ட அளவிலான டண்டேனாங் கிரிக்கெட் அணியில் சூரஜ் விளையாடி வருகிறார். மேலும் நடந்து முடிந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சியளிக்க நெட் பவுலராக சூரஜ் ரந்திவ் அழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கிரிக்கெட் வீரராக இருந்துவிட்டு ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநராக மாறியது சூரஜ் ரந்தீவ் மட்டுமல்ல. அவருக்கு முன்பாக இலங்கை கிரிக்கெட் வீரர், சிந்தாகா நமஸ்தே, முன்னாள் ஜிம்பான்வே கிரிக்கெட் வீரர் வாடிங்டன் வயேங்கா ஆகியோரும் ஆஸ்திரேலியாவில் வாழ்வாதாரத்துக்காக பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்தவர்கள்.


பெரிதோ.. சிறிதோ… எதுவாக இருந்தாலும் உழைத்து உண்பவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.