பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வாரியத்தில் சமீப காலங்களாக பிரச்னை நிலவிவருவதாக சில செய்திகள் வெளியாகின. இதனால் அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்கு பிரதமர் இம்ரான் கான் புதிய தலைவரை விரைவில் நியமிப்பார் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் திடீரென பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் தங்களது பதவியிலிருந்து விலகினர். இதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது?


இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தேர்வு செய்யப்பட்டார். அவர் தன்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளரை அறிவித்தார். அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேய்டன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வேர்னன் பிலாண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.



 


மேத்யூ ஹேய்டன் மற்றும் பிலாண்டர் ஆகிய இருவரின் அனுபவமும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கை கொடுக்கும் என்றும் ரமீஸ் ராஜா தெரிவித்தார். முன்னதாக பயிற்சியாளராக இருந்த மிஸ்பா உல் ஹக், "வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது தனிமைப்படுத்தப்பட்டிருந்த சூழலில் நான் என்னுடைய குடும்பம் மற்றும் என்னுடைய தற்போதைய நிலை குறித்து சற்று சிந்தித்தேன். அதன்படி நான் நீண்ட நாட்கள் என்னுடைய குடும்பத்தைவிட்டு தனியாக இருப்பதை உணர்ந்தேன். ஆகவே இனிமேல் சற்று அவர்களுடன் நேரத்தை செலவு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். அதனால் தற்போது என்னுடைய பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தேன்" எனக் கூறி பதவியை ராஜினாமா செய்தார். அவர் கூறிய அடுத்த நிமிடம் வாக்கர் யூனிஸூம் தன்னுடைய பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். 


 






அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணி அறிவிக்கப்பட்ட சில நொடிகளில் இவர்கள் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இவர்களது பதவிக்காலம் வரும் 2022ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில் அவர்கள் தற்போது திடீரென ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:16 அணிகள்... 29 நாட்கள்... ஒரு டைட்டில்! டி-20 உலக உலகக்கோப்பை அணிகள் முழு விவரம்!