கடந்த ஆண்டு அர்ஜெண்டினா கால்பந்து அணிக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர் மெஸ்ஸி. இதையடுத்து, இவருக்கு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். மேலும், கடந்த 2021ம் ஆண்டுக்காக ஃபிபாவின் சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தநிலையில், அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸியின் மனைவி அன்டோனேலா ரோகுஸ்ஸோவின் குடும்பத்தினருக்கு சொந்தமான பல்பொருள் அங்காடியில் நேற்று துப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்களில் ஒருவர், அந்த பல்பொருள் அங்காடி வளாகத்திற்கு நடந்து வந்து ஜன்னல்கள் மற்றும் முன் கதவுகள் மற்றும் உலோகத்திலான ஷட்டர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த வளாகத்திலுள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் அந்த வளாகத்தில் இருந்த சுவறு ஒன்றில், ” மெஸ்ஸி, நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்.” என்று கையால் எழுதப்பட்ட செய்தியையும் மெஸ்ஸியை எச்சரிக்கும் விதமாக எழுதியுள்ளனர். அர்ஜெண்டினாவில் பார்ரப்ரவாஸ் என்று அழைக்கப்படும் கால்பந்து வெறியர்கள் இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மேலும், மெஸ்ஸியிடம் இந்த வெறியர்கள் பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் இந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
சூப்பர்மெர்கடோ யுனிகோ என்று அழைக்கப்படும் இந்த சூப்பர் மார்க்கெட் மெஸ்ஸியின் மனைவி அன்டோனேலாவின் குடும்பத்தை சேர்ந்தது என்றும், அவரது உறவினர் ஒருவரால் நிர்வகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அர்ஜெண்டினாவில் அதிகாலை 2 மணியளவில் துப்பாக்கி சுடுதல் நடந்ததை தொடர்ந்து இந்த வளாகம் சிறிதுநேரம் மூடப்பட்டது.
மெஸ்ஸியின் சொந்த நகரமான ரொசாரியோவிம் புறநகர் பகுதியில் 'தி ஃபோர்ட்ரஸ்' என்ற பெயரில் ஒரு பெரிய மாளிகையை வைத்திருக்கிறார்.அதில் 15 கார்கள் நிற்கும் அளவிற்கு ஒரு பெரிய சினிமா திரையரங்கு மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவை உள்ளது.