மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் ஆக வாய்ப்புள்ள 5 அணிகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


மகளிர் உலகக்கோப்பை தொடர்:


மகளிர் கால்பந்து உலகக்கோப்பையில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய தொடராக, நடப்பாண்டு உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதுவரை மகளிர் உலகக்கோப்பை தொடரில் 24 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், இந்த முறை 32 அணிகள் பங்கேற்க உள்ளன. வரும் 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 


01. ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா  அமெரிக்கா?


நடப்பு சாம்பியனான அமெரிக்கா நடப்பாண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. ஏற்கனவே 2015ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற அமெரிக்கா அணி, நடப்பாண்டும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய தீவிரம் காட்டி வருகிறது. அவ்வாறு வெற்றி பெற்றால் மகளிர் உலகக்கோப்பை தொடரில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய அணி என்ற பெருமையை அமெரிக்கா பெறும். அலெக்ஸ் மார்கன், கெல்லி ஓ ஹாரா மற்றும் மேகன் ராபினோ ஆகிய நட்சத்திர வீராங்கனைகளுடன், சோபியா ஸ்மித், டிரினிட்டி ரோட்மேன் மற்றும் 18 வயதே ஆன அலிஸா தாம்சன் ஆகிய இளம் வீராங்கனைகள் தங்களது முதல் உலகக்கோப்பையில் விளையாட உள்ளனர். விவேகமான மூத்த வீராங்கனைகளுடன், வேகமான இளம் விராங்கனைகளை கொண்டுள்ள அமெரிக்க, எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது.  அதேநேரம், அமெரிக்காவை வீழ்த்தி கோப்பைய வெல்ல மேலும் சில அணிகள் மல்லுக்கட்ட தயாராகி வருகின்றன.


02. ஜெர்மனி:


1995 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் தொடர்ந்து 6 முறை ஐரோப்பா சாம்பியன்ஷிப்பை வென்ற ஜெர்மனியை தான்,  ஒட்டுமொத்த ஐரோப்பா கண்டமும் நம்பியுள்ளது. லீனா ஒபெர்டோர்ஃப், லே ஷெல்லர், அலெக்‌ஷாண்ட்ரா போப் மற்றும் ஜுலி பிராண்ட் ஆகிய வீராங்கனைகள் நடப்பாண்டு தொடரில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வயதான அணி என்று குறிப்பிட முடியாத அளவில் அதிக அனுபவம் கொண்ட வீராங்கனைகளை கொண்ட அணியாகவும் உள்ளது. இதனால், சரியான கலவையில் உலகக்கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலில் இருந்து தவிர்க்க முடியாத அணியாக ஜெர்மனி திகழ்கிறது.


03. ஆஸ்திரேலியா:


உள்நாட்டில் நடைபெறும் தொடரில் களமிறங்குவது திறமை வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலமாக திகழ்கிறது. சாம் கெர், எல்லி கார்பெண்டர் மற்றும் கெய்ட்லின் ஃபோர்ட் ஆகிய வீராங்கனைகள், எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. அண்மையில் இங்கிலாந்திற்கு எதிராக நடந்த நட்பு ரீதியான தொடரில், 2-0 என வெற்றி பெற்றது அவர்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது. அதேநேரம், முக்கிய வீராங்கனைகள் காயமடைந்து இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


04. ஸ்வீடன்:


பாரம்பரியமிக்க ஸ்வீடன் அணி உலக அளவிலான மகளி கால்பந்தாட்ட தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகக்கோப்பை, ஐரோப்பா சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் என எண்ட தொடராக இருந்தாலும், குறைந்தபட்சம் அரையிறுதிக்காவது அந்த அணி தகுதி பெற்று விடும். 2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அந்த அணி , 1991, 2011 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்நிலையில், அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீராங்கனைகள் 20 வயதை தாண்டியும், 30 வயதிற்குள்ளும் அடங்கியுள்ளனர். இதனால், சமகலவையுடன் ஸ்வீடன் அணி இந்த உலகக்கோப்பை தொடரில் களமிறங்கியுள்ளது.


05. இங்கிலாந்து:


நடப்பு ஐரோப்பிய சாம்பியன் எனும் பெருமிதத்துடன் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடரில் களமிறங்க உள்ளது. இதனால், இந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களில் நடைபெற்ற தொடர்களில் அந்த அணியின் செயல்பாடு மெச்சும் விதமாக இல்லை. ம் பெத் மீட், லியா வில்லியம்சன் மற்றும் ஃபிரான் கிர்பி போன்ற நட்சத்திர வீராங்கனைகள் காயம் கண்டு இருப்பது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அதேநேரம், எல்லா டூன், க்ளோ கெல்லி, லூசி பிரான்ஸ் மற்றும் அலெசியோ ருஸ்ஸோ  ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பது இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது