பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய கால்பந்து அணியும், பாகிஸ்தான் கால்பந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இரு அணிகள் மோதிய இந்த போட்டி பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது. 


இந்த போட்டியில் இந்திய அணிக்கு கேப்டன் சுனில் சேத்ரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்த, உதாந்தா சிங் 1 கோல் அடித்தார். பெனால்டி கார்னர்களில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி இரண்டு கோல்கை அடிக்க, 81வது நிமிடத்தில் உதாந்தா சிங் இந்திய அணிக்காக கோல் அடித்தார். 


அசத்திய சுனில் சேத்ரி: 


போட்டியின் 10வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோலை அடித்தார். அடுத்ததாக, 15வது நிமிடத்தில் ஒரு கோலும், 74வது நிமிடத்தில் ஒரு கோலும் பெனால்டி முறையில் சேத்ரி அடிக்க இந்திய அணி 3-0 என முன்னிலை வகித்தது. 






இந்தநிலையில், போட்டியின் பாதி நேரம் முடியபோகும் நேரத்தில், இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்திற்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர். தற்போது, இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


வாக்குவாதத்திற்கான காரணம் என்ன..? 


இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியபோது, முதல் பாதியிலேயே இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதுவரை 16 நிமிடங்களே போட்டி நடைபெற்றிருந்தது. பாகிஸ்தான் வீரர் இக்பால் பந்தை த்ரோ-இன் வீசியபோது இந்திய பயிற்சியாளர் இகோட் ஸ்டிமாக் பந்தை அவரது கையில் இருந்து தட்டி சென்றார். அப்போது பாகிஸ்தான் பயிற்சியாளர் ஷாஜாத் அன்வரும் களத்திற்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக இரு தரப்பு வீரர்களும் இடையே வாக்கவாதம் நடந்தது. 






இரு அணி வீரர்களையும் சமாதானப்படுத்திய நடுவர்கள், இந்திய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கிற்கு சிவப்பு அட்டையும், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் களத்தில் சண்டையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.