போர்ச்சுகலை சேர்ந்த நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச ஆடவர் கால்பந்தாட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி, சர்வதேச ஆடவர் கால்பந்தாட்ட போட்டியில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


யூரோ தகுதிச்சுற்றுப் போட்டி:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள யூரோ கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டியில், போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ களமிறங்கினார். அதில், அவர் அடித்த 2 கோல்களின் உதவியுடன் 4-0 என்ற கணக்கில் லிச்சென்ஸ்டைன் அணியை போர்ச்சுகல் அணி வீழ்த்தியது. அதேநேரம், இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம், சர்வதேச ஆடவர் கால்பந்தாட்ட போட்டிகளில் ரொனல்டோ புதிய சாதனை படைத்துள்ளார். 


நம்பர் ஒன் ஆனார் ரொனால்டோ:


லிச்சென்ஸ்டைன் அணிக்கு எதிராக களமிறங்கியதன் மூலம், சர்வதேச ஆடவர் காலபந்தாட்ட போட்டியில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை 38 வயதான ரொனால்டோ பெற்றுள்ளார். அதன்படி, லிச்சென்ஸ்டைன் அணிக்கு எதிராக அவர் விளையாடியது 197வது சர்வதேச போட்டியாகும். இந்த சாதனையை உலகக்கோப்பை தொடரிலேயே அவர் எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலிறுதிப்போட்டியில் போர்ச்சுகல் பெற்ற தோல்வியால் அந்த வாய்ப்பை இழந்தார். முன்னதாக, குவைத்தை சேர்ந்த முன்கள வீரரான பாடெர் அல்-முதாவா 196 சர்வதேச ஆடவர் போட்டிகளில் விளையாடியதது தான் சாதனையாக இருந்தது.  


ரொனால்டோ பெருமிதம்:


”சாதனைகள் தான் என்னை ஊக்குவிக்கின்றன. நான் வரலாற்றில் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரராக ஆக விரும்புகிறேன். அது என்னைப் பெருமைப்படுத்தும். ஆனால் அது அதோடு நிற்காது. நான் இன்னும் பல சாதனைகளை படைக்க விரும்புகிறேன்” என லிச்சென்ஸ்டைன் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ரொனால்டோ தெரிவித்தார்.


200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர்?


சர்வதேச ஆடவர் கால்பந்தாட்டத்தில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை வரும் ஜுன் மாதம் படைக்க வாய்ப்புள்ளது. அதற்கு நாலை மறுநாள் நடைபெற உள்ள லக்சம்பேர்க்கிற்கு எதிராக,  போர்ச்சுகல் அணி விளையாட உள்ள யூரோ கோப்பைக்கான இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். 


சர்வதேச போட்டிகளில் ரொனால்டோ:


கடந்த 2003ம் ஆண்டு முதல் போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். கஜகஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச போட்டியை அவர் விளையாடினார். இதுவரை 120 கோல்களை அடித்துள்ள அவர்,சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்னகத்தே கொண்டுள்ளார். முன்னதாக கடந்தாண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் போர்ச்சுகல் அணியின் தொடக்க லீக் ஆட்டத்தில் கோல் அடித்ததன் மூலம், 5 உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்பட்டு வரும், பாலன் டி ஆர் விருதை ரொனால்டோ 5 முறை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.