2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என்று உலகக் கால்பந்தாட்டத்தின் நிர்வாகக் குழுவான FIFA அறிவித்துள்ளது.


உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி:


ஃபிபா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட போட்டி அட்டவணையின்படி, உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு நிகழ்வு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ முழுவதும் உள்ள 16 முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை வரும் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி மெக்சிகோ சிட்டியின் எஸ்டேடியோ அஸ்டெகாவில் தொடங்கி, ஜூலை 19 ஆம் தேதி நியூ ஜெர்சியில் உள்ள ஈஸ்ட் ரதர்ஃபோர்டில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் முடிவடையவுள்ளது. இந்த மைதானத்தில் 82,500 பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு வசதிகள் கொண்டது. 


 






2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில்  13 போட்டிகளை கனடா நடத்தவுள்ளது. இதில் 10 போட்டிகள் குரூப் ஸ்டேஜில் நடைபெறும் போட்டிகள் ஆகும். டொராண்டோ மற்றும் வான்கூவர் இடையே சமமாக போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மெக்சிகோ சிட்டி, குவாடலஜாரா மற்றும் மான்டேரியில் உள்ள குரூப் ஸ்டேஜில் 10 போட்டிகள் உட்பட 13 போட்டிகளை மெக்சிகோ நடைபெறவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அமெரிக்காவில் உள்ள 11 நகரங்களில் நடைபெறும்.


2026ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி மெக்சிகோ நகரத்தின் எஸ்டாடியோ அஸ்டெகா போட்டியின் தொடக்க ஆட்டத்தை நடத்தவுள்ளது.  இதன் மூலம் மெக்சிகோ மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை நடத்தும் முதல் நாடாக மாறும். தொடக்க நாளில் குவாடலஜாராவில் ஒரு போட்டியும் நடைபெறவுள்ளது. 






மெக்சிகோவில் இதற்கு முன்பு?


இதற்கு முன்னர் மெக்சிகோ 1970 மற்றும் 1986 இல் உலகக் கோப்பையை நடத்தியது, இரண்டு பதிப்புகளின் இறுதிப் போட்டிகள் மெக்சிகோவில் உள்ள எஸ்டாடியோ அஸ்டெகாவில் நடைபெற்றது. இதில் 1970ஆம் ஆண்டு கால்பந்து ஜாம்பவான் பீலேவின் பிரேசில் இத்தாலியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி மகுடம் சூடியது. அதன் பின்னர் 1986ஆம் ஆண்டு கால்பந்து சூப்பர் ஸ்டார் டியாகோ மரடோனாவின் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. 


மரடோனா 1986 காலிறுதியில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வென்றபோதுதான் உலகப் புகழ்பெற்ற கடவுளின் கை (hand of God) எனப்பட்ட கோலை அடித்து அசத்தினார். அதேபோல் நூற்றாண்டின் கோலையும் அடித்தார்.