சவுதி அரேபியாவுடனான தோல்விக்கு பிறகு நிச்சயம் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் அர்ஜெண்டினா அணி மெக்ஸிகோ அணிக்கு எதிராக களமிறங்கியது. 


லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த இந்த சி பிரிவு ஆட்டத்தில் ஒரு தோல்விக்கு பிறகு அர்ஜெண்டினா களமிறங்கியதால் அனைவரது எதிர்பார்ப்பும் மெஸ்ஸி என்னும் ஒரு தலைவன் மீது இருந்தது. போட்டி தொடங்கியது முதல் பரபரப்பான சூழ்நிலை உச்சத்தை தொட, முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து இரண்டாம் பாதி தொடங்கிய சில மணிநேரங்களிலேயே அர்ஜெண்டினா அணி கேப்டன் மெஸ்ஸி 64 வது நிமிடத்தில் மெக்ஸிகோ அணிக்கு எதிராக அட்டகாசமாக கோல் அடித்தார். இந்த கோல் மூலம் ஒட்டுமொத்த ஃபிபா உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸியின் 8வது கோல் இதுவாகும். 


இதை தொடர்ந்து மெக்ஸிகோ எவ்வளவோ முறை கோல் அடிக்க முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. இருப்பினும் விட்டுகொடுக்காத அர்ஜெண்டினா அணி 87 வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார். இந்த கோலை பெர்னாண்டெஸ் தனது முயற்சியால் வலைக்குள் தள்ளினார். இதையடுத்து போட்டி முடிவில் அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 


இதனைதொடர்ந்து வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் மெஸ்ஸி பேசியதாவது, “அர்ஜெண்டினா அணி மற்றொரு உலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. நான் மக்களுக்கு அதையே சொல்கிறேன். எங்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். என்னால் என்ன முடியுமோ அதை செய்தோம். நாங்கள் வெற்றி பெற வேண்டும், அதனால் நாங்கள் அதை மட்டுமே சார்ந்து இருக்கிறோம். 






முதல் பாதியில் நாங்கள் விரும்பியபடி விளையாடவில்லை. இரண்டாவது பாதியில் நாங்கள் சிறப்பாக விளையாட தொடங்கினோம்” என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், “சவுதி அரேபியாவுக்கு எதிராக கணுக்கால் காயம் ஏற்பட்டது என்று வதந்தி கிளம்பியது. என்னுடைய காயத்தைப் பற்றி மக்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. உண்மை என்னவென்றால் எனக்கு எதுவுமில்லை. என் கணுக்கால் போட்டியின்போது சிறிதாக திரும்பியது உண்மைதான்.  ஆனால் பெரிதாக எதுவும் காயமில்லை. தொடர்ந்து பயிற்சி செய்தேன்" என்று கூறினார்.


மெஸ்ஸியின் புது சாதனை:


மெக்ஸிகோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மெஸ்ஸி கோல் அடித்ததன் மூலம் அர்ஜெண்டினா அணியின் ஜாம்பவான் டியாகோ மரடோனாவுடன் சாதனையை சமன் செய்துள்ளார். இதுவரை உலகக் கோப்பை தொடரில் 21 ஆட்டங்களில் விளையாடியுள்ள மரடோனா 8 கோல்களை அடித்துள்ளார். அதேபோல், மெஸ்ஸியும் தனது 21 ஆட்டத்தில் 8 கோல்களை அடித்து உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடம் பிடித்து மரடோனாவின் சாதனையை சமன் செய்தார். இந்த பட்டியலில் அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா 10 கோல்கள் முதல் இடத்தில் இருக்கிறார். 


அதேபோல், மற்றொரு நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகக் கோப்பை தொடரில் 8 கோல்கள் அடித்துள்ளார்.தற்போது மெஸ்ஸியும் 8 கோல்களுடன் சம நிலையில் உள்ளார். அர்ஜெண்டினா அணிக்காக இதுவரை 168 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 94 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.