பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் வீரர் கைலியன் எம்பாப்பேவை, சவுதி அரேபிய அணியான அல் ஹிலால் 300 மில்லியன் யூரோக்களுக்கு, அதாவது சுமார் ரூ.2,700 கோடிக்கு (332 மில்லியன் டாலர்) ஒப்பந்த செய்ய முன்வந்த நிலையில், எம்பாப்பே அந்த அணியின் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நட்சத்திர வீரர்களை ஈர்க்கும் சவுதி அரேபியா
24 வயதான Mbappé, PSG உடனான 12 மாதங்கள் நீட்டிப்புக்கான ஆப்ஷனை எடுத்துக் கொள்ளவில்லை என்ற அவரது முடிவிற்குப் பிறகு பல அணிகள் அவரை ஒப்பந்தம் செய்ய முந்தி வருகின்றனர். குறிப்பாக பணக்கார நாடுகளான சவுதி அரேபிய அணிகள் பல அவரை ஒப்பந்தம் செய்யும் முடிவில் இருந்தன. சவுதி அரேபியாவில் நடக்கும் லீக் போட்டிகள் கால்பந்தில் அவ்வளவு நிபுணத்துவம் பெற்ற அணிகள் இல்லை என்றாலும், அங்கு கால்பந்து ரசிகர்கள் அதிகம். அதனால் அங்குள்ள அல்-நாசிர் அணி சில மாதங்கள் முன்பு ரூ.1,700 கோடிக்கு ரொனால்டோவின் ஒப்பந்தம் செய்திருந்தது. அதே போல நட்சத்திர வீரரான எம்பாப்பேவும் சவுதி அரேபிய லீக் அணிக்கு சென்றால் அந்த லீக் தொடர் உலக அளவில் புகழ் பெரும் என்பதால் பலர் அதற்கு திட்டமிட்டனர். ஆனால் அவற்றிற்கு தற்போது எம்பாப்பே 'நோ' சொல்லியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நிராகரித்த எம்பாப்பே
அல் ஹிலால் பிரதிநிதிகள் பிரேசிலின் முன்னணி வீரருடன் ஒரு பெரிய ஒப்பந்தத்தை முடிக்க பிரெஞ்சு தலைநகரில் காத்திருந்தபோது, எம்பாப்பே அவர்களை சந்திக்க மறுத்து, அந்த ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளார். இதனால் 2018 உலகக் கோப்பை வெற்றியாளரான எம்பாப்பே ரியாத்தை தளமாகக் கொண்ட கிளப்பில் சேர விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் வரவிருக்கும் சீசனின் முடிவில் ரியல் மாட்ரிட்டில் சேரும் நோக்கத்துடன் 'Free agent' ஆக மாறத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வேறு அணிக்கு சென்றால் எவ்வளவு தொகை கிடைக்கும்?
Mbappe அடுத்த கோடையில் ரியல் மாட்ரிட்டுக்கு மாறினால், அவர் 100 மில்லியன் யூரோக்களுக்கு கையொப்பமிட வேண்டி இருக்கும். அது தற்போது அவர் நிராகரித்துள்ள தொகையில் மூன்றில் ஒரு பங்குதான். ஒருவேளை அவர் மீண்டும் PSG உடன் தொடர விரும்பினால், செப்டம்பரில் 80 மில்லியன் யூரோக்கள் போனஸாக அவருக்கு கிடைக்கும்..
மீண்டும் PSG க்கு செல்வாரா?
PSG, ஒரு வருடத்தில் ஒப்பந்தம் முடிவடையும் போது, அவரை அவ்வளவு எளிதாக Free Agent ஆக விடாது என்பது உறுதி. அந்த அணியும் நட்சத்திர வீரரைப் மீண்டும் ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளதாகவே கூறப்படுகிறது. பரிமாற்றக் கட்டணம் தொடர்பாக PSG மற்றும் அல் ஹிலால் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை, மேலும் இரு கிளப்புகளும் அவற்றின் மதிப்பீடுகளில் தனித்தனியாகவே உள்ளன என்று கூறப்படுகிறது. PSG இல் இரண்டு வருட காலம் இருந்த பிறகு இண்டர் மியாமியில் சேர்ந்த அர்ஜென்டினா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியையும் ஒப்பந்தம் செய்ய முன்வந்து அவரையும் இழந்தது அல் ஹிலால். ஆனால் மனம் தளராமல் பல முக்கிய வீரர்களை அவர்கள் அணிக்கு கொண்டு வரும் திட்டத்தில் இன்னும் உள்ளது அல் ஹிலால்.