கால்பந்தாட்ட ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸி, பிஎஸ்ஜி அணியை விட்டு விலகி அமெரிக்காவின் இண்டர் மியாமியின் அணியில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.


பிஎஸ்ஜியில் இருந்து விலகிய மெஸ்ஸி:


கால்பந்தாட்ட போட்டியின் ஜாம்பவானாக விளங்கும், அர்ஜெண்டினாவை சேர்ந்த 35 வயதான லியோனல் மெஸ்ஸி பிரான்சை சேர்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார்.  தொடர்ந்து, கடந்த சனிக்கிழமையன்று அந்த அணிக்கான கடைசி லீக் போட்டியில் விளையாடியாடினார். இதைதொடர்ந்து, புதியதாக எந்த அணிக்காக மெஸ்ஸி கிளப் போட்டிகளில் விளையாட உள்ளார் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.


இண்டர் மியாமியில் இணைகிறேன் - மெஸ்ஸி:


ஸ்பானிஸ் நாட்டை சேர்ந்த செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மெஸ்ஸி “இண்டர் மியாமி அணியில் இணையலாம் என நான் முடிவு செய்துள்ளேன். ஒப்பந்தம் இன்னும் 100 சதவிகிதம் அளவிற்கு முழுமையாக முடிவடையவில்லை. இன்னும் சில வேலைகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும் எனது பயணத்தை அவர்களுடன் சேர்ந்து தொடர நான் முடிவு செய்துள்ளேன். உலகக் கோப்பையை வென்றாலும், பாரிசிலோ அணிக்கு மீண்டும் செல்ல முடியாமல் போன பிறகு, வேறு வழியில் கால்பந்தாட்டத்தை அனுபவித்து வாழவும், எனது அன்றாட வாழ்க்கையை மேலும் அனுபவிக்கவும் மியாமி அணிக்கு செல்ல வேண்டிய நேரம் இது. அதோடு, இது பணப் பிரச்சினையாக இருந்திருந்தால், நான் சவுதி அரேபியாவுக்கோ அல்லது வேறு ஒரு அணிக்கோ சென்றிருப்பேன். உண்மை என்னவென்றால், எனது முடிவு பணத்திற்கானது அல்ல” என தெரிவித்துள்ளார்.


ரூ.8000 கோடி வேண்டாம் - மெஸ்ஸி:


தனது கால்பந்தாட்ட காலத்தின் பெரும்பகுதியை பார்சிலோனா அணியில் தான் மெஸ்ஸி கழித்தார். இருப்பினும் கடந்த 2021ம் ஆண்டு அந்த அணியில் இருந்து விலகி, கடந்த 2 வருடங்களாக பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில் கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி, அண்மையில் மெஸ்ஸி சவுதி அரேபியாவிற்கு சென்று வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைதொடர்ந்து தான் அவர் பிஎஸ்ஜி அணியில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். அதேநேரம், சவுதி அரேபியாவை சேர்ந்த அல் ஹிலால்  கால்பந்து அணி, மெஸ்ஸிக்கு ஆண்டிற்கு ஒரு பில்லியன் டாலர்களை வழங்க முன்வந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை நிராகரித்து விட்டு, இண்டர் மியாமி அணியில் மெஸ்ஸி இணைந்துள்ளார்.


இண்டர் மியாமி அணி:


இண்டர் மியாமி அணி கடந்த 2018ம் ஆண்டு தான் தோற்றுவிக்கப்பட்டது. பிஎஸ்ஜி, மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் போன்ற அணிகளுக்காக விளையாடிய முன்னாள் நட்சத்திர வீரர், டேவிட் பெக்காம் இண்டர் மியாமி அணியின் இணை உரிமையாளராக உள்ளார். அதேநேரம், அந்த அணி இதுவரை கிளப் போட்டிகளில் பெரிய வெற்றியையோ, கோப்பையையோ கைப்பற்றியதில்லை. அண்மையில் நடைபெற்ற மேஜர் லீக் சாக்கர் தொடரில் கூட, மியாமி அணி கடைசி இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.