தனது ஆயிரமாவது போட்டியை விளையாடிய மெஸ்ஸி நேற்றிரவு அற்புதமான கோல் ஒன்றை அடித்து ஆட்டத்தை அர்ஜென்டினா பக்கம் திருப்பி வெற்றிகராமக போட்டியை வெல்லவும் உதவியது அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ள நிலையில் இதனை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
மெஸ்ஸியின் 1000வது போட்டி
100 வது போட்டியில் அர்ஜென்டினாவுக்காக கேப்டன்சி செய்த இந்த போட்டி மெஸ்ஸியின் ஒட்டுமொத்த வாழ்க்கையில் 1000வது போட்டி என்பது தான் ஸ்பெஷல். அந்த ஸ்பெஷல் போட்டியில் அவரது ஆதிக்கமும் ரசிகர்களை மென்மேலும் மகிழ்வித்துள்ளது. 16வது சுற்றில் விளையாடிய ஆஸ்திரேலியா அர்ஜென்டினா அணிகளிடையேயான போட்டியில், முதல் பாதியின் நடுவே தனது க்ளாசிகை காண்பித்தார் மெஸ்ஸி. அத்தனை வீரர்களுக்கு இடையில் நேர்த்தியாக கோல் போஸ்டுக்குள் பந்தை தள்ளி அதகளப் படுத்தினார். இந்த கோல் வாழ்நாளில் அவருக்கு 789 வது கோலாக அமைந்தது. உலகக் கோப்பைகளில் மெஸ்ஸியின் ஒன்பதாவது கோல் இதுவாகும், அவர் 8 கோல் அடித்திருந்த டியாகோ மரடோனா மற்றும் கில்லர்மோ ஸ்டேபில் ஆகியோரை கடந்து முன்னாள் வந்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக கேப்ரியல் பாடிஸ்டுடா மட்டுமே இதுவரை 10 கோல்கள் சேர்த்துள்ளார். இந்த சாதனையை இந்த உலகக்கோப்பையிலேயே முறியடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
முன்னிலையில் வந்த அர்ஜென்டினா
அதன் பிறகு 57வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி வீரரே கோல்கீப்பரிடம் பாஸ் செய்த பந்தை அவரை ஏமாற்றி அவரிடம் இருந்தே வாங்கிய ஆல்வரேஸ் எளிதாக ஒரு கோலை அடிக்க அர்ஜென்டினா நல்ல நிலைக்கு வந்தது. இது போதும் வென்றுவிடலாம் என்று நினைத்திருந்த நிலையில், ஆஸ்திரேலியா அதிர்ச்சி வைத்தியம் அளிக்க துவங்கியது. போட்டியின் கடைசி கட்டத்தில் வீறு கொண்டு எழுந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அர்ஜென்டினாவுக்கு பயத்தை காட்டினர்.
பயம் காட்டிய ஆஸ்திரேலியா
போட்டியின் 77 வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் பெர்னாண்டஸ் பாக்ஸிற்கு வெளியே இருந்து அற்புதமான ஷாட் அடிக்க கோல் போஸ்டில் சென்று விழுந்தது. இதனால் ஆட்டம் உச்சகட்ட பரபரப்புக்கு சென்றது. ஆஸ்திரேலிய அணி மேலும் ஒரு கோல் உடனே அடிக்க முன்னேறி வந்த நிலையில் ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ஒரு கோலை அர்ஜென்டினா போராடி தடுக்கவேண்டி இருந்தது. அதன் பிறகு சூடு பறக்க நடந்த ஆட்டத்தில் 7 நிமிடம் எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்ட நிலையில் முழுவதும் பரபரப்பாக சென்றது. ஆனால் கோல்களை விடாமல் தடுத்ததால் இறுதியில் அர்ஜென்டினா வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
காலிறுதிப் போட்டி
ஆஸ்திரேலியா அர்ஜென்டினா போட்டிக்கு முன்னதாக கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடந்த 16வது சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி அமெரிக்காவை வீழ்த்திய நிலையில் அர்ஜென்டினா தற்போது காலிறுதியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. டிசம்பர் 10 அன்று நடைபெறவுள்ள இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டி கத்தாரின் லுசைலில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.