FIFA WORLDCUP 2022: 22வது கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தாரில் மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் மொத்தம் 32 அணிகள் களமிறங்கி, லீக் போட்டிகள், நாக் - அவுட் சுற்று, கால் இறுதி சுற்றுகளைக் கடந்து போட்டித் தொடரானது அரை இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய முதலாவது அரை இறுதிப் போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜெண்டினா அணியும், முதலாவது உலகக்கோப்பையை வெல்ல பெரும் கனவு கண்ட குரோஷிய அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 


போட்டியின் ஆரம்பம் முதலே அர்ஜெண்டினா அணியானது ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. குரோஷிய அணி தாங்கள் கோல் அடிக்க வேண்டும் என்பதற்காக விளையாடியதைவிட, அர்ஜெண்டினாவை கோல் அடிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாடிய நிமிடங்களே அதிகம். 


மெஸ்ஸி


போட்டியின் 34வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி - ஷாட்டை அணியின் கேப்டனும் உலகத்தரமான கால்பந்து வீரருமான லியோனல் மெஸ்ஸி மிகவும் சாதூர்யமாக கோல் அடித்து அணியையை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்ல முயற்சித்தார் என்பதை விட, உலகக்கோப்பைக்கு அருகில் கொண்டு சென்றார் என்றே கூறவேண்டும். 


சீறிப்பாய்ந்த ஆல்வரிஸ்


அதன் பின்னர், அர்ஜெண்டினாவின் ஜுவாலியன் ஆல்வரிஸ் போட்டியின் 39வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். போட்டியின் முதல் பாதியில், 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. முதல் பாதிக்கு பின்னர், இரு அணிகளுமே போட்டியினை விறுவிறுப்பாக்கினர். ஆனால் அதற்கு மீண்டும் பலன் கிடைத்ததெல்லாம், அர்ஜெண்டினாவுக்குத்தான். போட்டியின் 69வது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸி மிகவும் சாதூர்யமாக பந்தை பாஸ் செய்ய ஜுவாலியன் ஆல்வரிஸ் நொடிப்பொழுதில் கோலாக மாற்றினார். இதனால், 3 - 0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்ததுடன், போட்டியில் தங்களுடைய வெற்றியையும் உறுதி செய்தனர். 






6வது முறையாக...


3 -0 என்ற வலுவான நிலையில் உள்ளோம் என மெத்தமாக இல்லாமல், தொடர்ந்து கோல் அடிக்க அர்ஜெண்டினா அணி முயற்சி செய்து கொண்டே இருந்தது. போட்டியின் முழு நேரம் முடிந்த பிறகு வழங்கப்பட்ட எக்ஸ்ட்ரா டைமிலும் கோல் அடிக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. இறுதில் போட்டியை  3 - 0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணி வென்று உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அணியாகியுள்ளது. இந்த போட்டியில்  வென்றதால் 6வது முறையாக அர்ஜெண்டினா அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மோதவுள்ள பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளில் யாரேனும் ஒருவர் அர்ஜெண்டினாவுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதும், அதற்கு முன்னர் சனிக்கிழமை அதாவது டிசம்பர் 17ஆம் தேதி, மூன்றாவது இடத்துக்கான போட்டி நடைபெறவுள்ளது.