SAFF சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் குவைத் அணியை வீழ்த்தி இந்திய கால்பந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 9வது முறையாக தெற்காசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. பெனால்டி ஷூட் அவுட்டில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தியது. முன்னதாக, நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது. ஆனால் கூடுதல் நேரத்திலும் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. பின்னர் பெனால்டி ஷூட் அவுட் மூலம் ஆட்டம் முடிவு செய்யப்பட்டது.


இந்திய அணிக்காக பெனால்டி ஷூட் அவுட்டில் கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோலை பதிவு செய்தார். இவரை தொடர்ந்து, மகேஷ் சிங், சுபாசிஷ் போஸ், லாலியாஞ்சுவாலா சாங்டே மற்றும் சந்தேஷ் ஜிங்கன் ஆகியோர் கோல் அடித்தனர்.  தந்தா சிங் பெனால்டி ஷூட் அவுட்டில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்ற தவறவிட்டார். இந்த போட்டி முழுவதும் சுனில் சேத்ரி முழுப் போட்டியிலும் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து, இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் சுனில் சேத்ரி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார்.


ஸ்டேடியமே ஒன்றாக பாடிய ‘வந்தே மாதரம்’:


குவைத் கேப்டன் கலீத் ஹாஜியாவின் ஷாட்டை கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சந்து தடுத்து இந்தியாவுக்கு வெற்றியைக் கொடுத்தபோது, ​​சுற்றியிருந்த கூட்டம் இந்திய அணிக்கு ஆதரவு கொடுத்து குரல் எழுப்பியது. 






 வெற்றிக்கு பிறகு இந்திய கால்பந்து வீரர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்த மைதானம் முழுவதும் சுற்றி வந்தனர். அப்போது, ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வந்தே மாதரம் பாடலை பாடிய தருணம் அனைவரையும் புல்லரிக்க செய்தது. 


வெற்றி தருணம்: 






இந்தியா-குவைத் இறுதிப் போட்டியின் முதல் கோலை குவைத் வீரர் அல்கால்டி அடித்தார். இதன் மூலம் ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் குவைத் 1-0 என முன்னிலை பெற்றது. அதேநேரம், இந்திய அணிக்கு 17வது நிமிடத்தில் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் தவறிவிட்டது. எனினும் இந்திய அணிக்கு 39வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி சமன் செய்தது. இதையடுத்து ஆட்டம் 1-1 என்ற சமநிலைக்கு வந்தது. இருப்பினும், இரு அணி வீரர்களும் இதற்குப் பிறகும் பல வாய்ப்புகளைப் பெற்றனர், ஆனால் அவற்றை கோல்களாக மாற்ற முடியவில்லை. அப்போது பெனால்டி ஷூட் அவுட்டில் ஆட்டம் முடிவு செய்யப்பட்டது. இதில் இந்திய அணி 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.