இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கை அப்பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு.


உலகக் கோப்பை கால்பந்து:


2026-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடைபெற்றது. இதில் ஆசிய அளவிலான தகுதி சுற்றின் 2-வது கட்ட போட்டியில் 36 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த அணிகள் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.


இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதியது. புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் 3-வது கட்ட தகுதி சுற்று தொடருக்கு முன்னேறியது. இதில் இந்திய அணி தங்களது கடைசி ஆட்டத்தில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி கத்தார் அணியை எதிர்கொண்டு விளையாடியது.


இந்திய அணி தோல்வி:


இந்த போட்டியில் வெற்றி பெற்றால் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் தகுதி சுற்றின் 3வது கட்டத்துக்கு முன்னேறி சாதனை படைக்கும் இந்திய அணியின் கனவு பறிபோனது. இந்த தோல்வியினால் இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.


பயிற்சியாளர் நீக்கம்:


இந்நிலையில் இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கை நீக்கியுள்ளது அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு. இது தொடர்பாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு  (AIFF) இன்று (ஜூன் 17) வெளியிட்ட அறிக்கையில், “சீனியர் ஆண்கள் தேசிய அணியின் FIFA உலகக் கோப்பை 2026 தகுதி பிரச்சாரத்தின் ஏமாற்றமளிக்கும் முடிவைக் குறிப்பிட்டு, அணியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஒரு புதிய தலைமை பயிற்சியாளர் சிறப்பாக நியமிக்கப்படுவார் என்று உறுப்பினர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.


தற்போதைய தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கை அப்பொறுப்பில் இருந்து நீக்கும் முடிவை  தற்காலிக பொதுச் செயலாளர் சத்தியநாராயணனுக்கு இன்று நடைபெற்ற கூட்டத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டது. இச்சூழலில் இகோர் ஸ்டிமாக் உடனடியாக அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்” என்று இந்திய தேசிய கால்பந்து அணி கூறியுள்ளது. அதோடு, “இந்திய அணிக்காக அவர் இதுவரை செய்த சேவைக்கு நன்றி” என்றும் கூறப்பட்டுள்ளது. 


இகோர் ஸ்டிமாக் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.