கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அர்ஜெண்டினா அணி கோப்பையை கைப்பற்றி உலகம் முழுவதும் உள்ள அர்ஜெண்டினா ரசிகர்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது வரை அர்ஜெண்டினாவின் வெற்றியை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், கத்தாரில் இருந்து உலகக்கோப்பையுடன் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பிய அர்ஜெண்டினா அணியினருக்கு அந்த நாட்டு மக்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்துள்ளனர். அர்ஜெண்டினாவின் எசெய்சாவிற்கு மெஸ்ஸி தலைமையிலான அணியினர் உலகக்கோப்பையுடன் வந்திறங்கினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமானத்தில் இருந்து உலகக்கோப்பையுடன் அர்ஜெண்டினா கேப்டனும், கால்பந்து ஜாம்பவனுமாகிய மெஸ்ஸி இறங்கினார். அவருக்கு பின்னால் ஒவ்வொரு வீரர்களும் வந்திறங்கினர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், சாம்பியன்களாகிய அவர்கள் அனைவரும் திறந்தவெளி பேருந்தில் ஏற்றப்பட்டு அந்த நாட்டின் தேசிய நெடுஞ்சாலையில் உலகக்கோப்பையை கையில் ஏந்தியவாறு உலா வந்தனர். அவர்களுக்கு சாலைகளின் இரு புறங்களிலும் மக்கள் அலைகடலென திரண்டு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
சாலையில் திரண்டியிருந்த லட்சக்கணக்கான மக்களும் மெஸ்ஸியின் பெயரையும், மற்ற வீரர்களின் பெயரையும், அர்ஜெண்டினாவின் பெயரையும் கரகோஷமாக எழுப்பினர். ரசிகர்களின் சுனாமி அலையில் மிதந்து வந்த அர்ஜெண்டினா வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் மட்டுமே அமைந்திருந்த அர்ஜெண்டினா கால்பந்து அமைப்பின் தலைமையகத்திற்கு சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகே சென்றடைந்தனர்.
வீரர்களும் திறந்த வெளி பேருந்தில் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தபடியும், அவர்களுக்கு பறக்கும் முத்தங்களை பறக்கவிட்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியபடியே சென்றனர். ரசிகர்களும் தங்களது செல்போன்களில் அவர்களை புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர். கத்தாரின் லூசையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் போட்டி நேரம் முடிந்தபோது பிரான்ஸ் – அர்ஜெண்டினா ஆகிய 2 அணிகளும் 3-3 என்று சமநிலையில் இருந்ததால் பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜெண்டினா வீரர்களும், அர்ஜெண்டினா கோல்கீப்பரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை தங்களுத நாட்டிற்கு சொந்தமாக்கி கொடுத்தனர்.
மேலும் படிக்க: தாய்நாட்டுக்குச் சென்றதும் அர்ஜென்டீனா அணி வீரர்களின் முதல் வேலை இதுதான்.. அறிவித்த கால்பந்து சங்கம்..
மேலும் படிக்க: Messi Insta Post: உலகக்கோப்பையை வென்ற 24 மணிநேரத்தில் மெஸ்ஸி படைத்த புதிய சரித்திரம்.. இன்ஸ்டாவில் சாதனை