FIFA WORLDCUP 2022: கத்தார் நாட்டில் மிகவும் கோலாகலமான உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நாளை தொடங்கவுள்ளது. 


உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்களோ, அதை விட இரண்டு மடங்கு ரசிகர்கள் கால்பந்து விளையாட்டிற்கு உண்டு. கால்பந்து தொடரில் பல நாடுகளில் லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும், ஃபிபா உலகக் கோப்பை என்றதும் ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களும் உற்று நோக்கும் ஒரே தொடர் இந்த தொடர் மட்டும்தான். 


அந்தவகையில் ஃபிபா சர்வதேச கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் இந்த தொடரானது வருகின்ற 20ம் தேதி கத்தார் நாட்டில் தொடங்குகிறது. உலகக் கோப்பை கால்பந்து திருவிழா  நாளை தொடங்கவுள்ளதால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து  ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் ஆவலும் அதிகரித்து வருகிறது. 


32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாட இருக்கின்றனர். முதல் போட்டியானது வருகின்ற 20ம் தேதி கத்தார்-ஈகுவடார் நாடுகளுக்கிடையே நடைபெற இருக்கிறது. 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொத்தம் 32 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. மொத்தம் 64 போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல் இந்த முறையும் 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தார் நாடே கால்பந்து திருவிழாவில் மூழ்கவுள்ளது. 


கோப்பையை வெல்ல யார் யாருக்கு வாய்ப்பு






32 அணிகள் பங்கேற்றாலும் கோப்பையை வெல்லப்போவது ஒரு அணி தான். 32 அணிகளின் தரவரிசை மற்றும் வீரர்களின் திறமை ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, குறிப்பிட்ட ஒரு சில அணிகள்தான் கோப்பையை வெல்லும் அணிகளாக அறியப்பட்டுள்ளன. அவற்றில் நடப்புச் சாம்பியன் பிரான்ஸ், பிரேசில், அர்ஜெண்டினா, பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ரசிகர்களுக்கு கட்டுப்பாடு


இம்முறை உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் நடைபெறுவதால், ஃபிபா நிர்வாகம் கத்தார் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுருத்தியுள்ளது. குறிப்பாக இரண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  ரசிகர்களோ அல்லது ரசிகைகளோ கவர்ச்சியான முறையில் ஆடை அணியக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டி நடக்கும் கால்பந்து மைதானங்களில் பீர் விற்பனை செய்யப்படமாட்டாது என கத்தார் நாடு தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத கட்டுப்பாடுகளுடன் இந்த 22வது உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நடைபெறவுள்ளதால் கால்பந்து வரலாற்றில் இது தனி கவனத்தினை ஈர்த்துள்ளது. 




மேலும் படிக்க., 


FIFA World Cup : மஞ்சள் அட்டை, சிவப்பு அட்டை..! இரண்டும் எதற்கு..? தண்டனைகள் என்ன தெரியுமா..?