22வது கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தாரில் மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் மொத்தம் 32 அணிகள் களமிறங்கி, லீக் போட்டிகள், நாக் - அவுட் சுற்று, கால் இறுதி சுற்றுகளைக் கடந்து போட்டித் தொடரானது அரை இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய முதலாவது அரை இறுதிப் போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜெண்டினா அணியும், முதலாவது உலகக்கோப்பையை வெல்ல பெரும் கனவு கண்ட குரோஷிய அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 


போட்டியின் ஆரம்பம் முதலே அர்ஜெண்டினா அணியானது ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. குரோஷிய அணி தாங்கள் கோல் அடிக்க வேண்டும் என்பதற்காக விளையாடியதைவிட, அர்ஜெண்டினாவை கோல் அடிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாடிய நிமிடங்களே அதிகம். 


மெஸ்ஸியின் சாதனைகள்..! 


போட்டியின் 34வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி - ஷாட்டை அணியின் கேப்டனும் உலகத்தரமான கால்பந்து வீரருமான லியோனல் மெஸ்ஸி மிகவும் சாதூர்யமாக கோல் அடித்து அணியையை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்ல முயற்சித்தார் என்பதை விட, உலகக்கோப்பைக்கு அருகில் கொண்டு சென்றார் என்றே கூறவேண்டும். 


அதன் பின்னர், அர்ஜெண்டினாவின் ஜுவாலியன் ஆல்வரிஸ் போட்டியின் 39வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். போட்டியின் முதல் பாதியில், 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. முதல் பாதிக்கு பின்னர், இரு அணிகளுமே போட்டியினை விறுவிறுப்பாக்கினர். ஆனால் அதற்கு மீண்டும் பலன் கிடைத்ததெல்லாம், அர்ஜெண்டினாவுக்குத்தான். போட்டியின் 69வது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸி மிகவும் சாதூர்யமாக பந்தை பாஸ் செய்ய ஜுவாலியன் ஆல்வரிஸ் நொடிப்பொழுதில் கோலாக மாற்றினார். இதனால், 3 - 0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்து, உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 


இந்த போட்டியினை வென்று அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றதுடன் மெஸ்ஸி, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 


அன்டோனியோ கார்பஜல், லோதர் மத்தாஸ், ரஃபா மார்க்வெஸ், ஆண்ட்ரெஸ் கார்டாடோ மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருடன் ஐந்து உலகக் கோப்பைகளில் விளையாடிய ஆறு கால்பந்து வீரர்களில் மெஸ்ஸியும் ஒருவர்.


அவர் இப்போது  உலகக் கோப்பையை  வென்ற ஜெர்மன் அணியின் கேப்டன் லோதர் மத்தாஸுடன் அதிக உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றவர் என்ற சாதனையைப் பகிர்ந்துள்ளார். அதாவது இதுவரை 25 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாயியுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் விளையாடும் போது மத்தாஸின் சாதனையை அவர் முறியடிக்கவுள்ளார். 


உலகக் கோப்பையில் 18 முறை கேப்டனாக விளையாடி சாதனை படைத்துள்ளார் மெஸ்சி. அவருக்கு அடுத்தபடியாக ரஃபா மார்க்வெஸ் (17), டியாகோ மரடோனா (16) உள்ளனர். 



ஐந்து உலகக் கோப்பை பதிப்புகளில் அசிஸ்ட் பதிவு செய்த ஒரே வீரர் இவர்தான். 
நாக் அவுட்  சுற்றில் அதிக அசிஸ்ட் செய்தவர்கள் என்ற சாதனையை பீலேவுடன் மெஸ்ஸி பகிர்ந்து கொண்டுள்ளார். 


உலகக் கோப்பையில் 11 கோல்கள் அடித்து அர்ஜென்டினாவின் முதல் வீரர் மெஸ்ஸி. அவரைத் தொடர்ந்து கேப்ரியல் பாடிஸ்டுடா (10), டியாகோ மரடோனா (8), கில்லர்மோ ஸ்டேபில் (8), மரியோ கெம்பஸ் (6), கோன்சாலோ ஹிகுவைன் (5) ஆகியோர் உள்ளனர். 


உலகக் கோப்பை வரலாற்றில் பவுலோ மால்டினி அதிக நிமிடங்கள் விளையாடியவராக உள்ளார், இவர்  2,217 நிமிடங்கள் களத்தில் விளையாடியுள்ளார். மெஸ்ஸி தற்போது 2,194 உள்ளார் மற்றும் கத்தார் 2022 இறுதிப் போட்டியில் இத்தாலிய வீரரான பவுலா மால்டினின் சாதனையை முறியடிப்பார்.  


உலகக் கோப்பையில் தனது பதின்பருவம், 20 மற்றும் 30 வயதுகளில் கோல் அடித்த ஒரே வீரர் மெஸ்ஸி மட்டுமே. 


மெஸ்ஸி தனது முதல் மற்றும் சமீபத்திய உலகக் கோப்பை கோல்களை 16 ஆண்டுகள் 180 நாட்கள் இடைவெளியில் அடித்தார். உலகக் கோப்பை வரலாற்றில் அடுத்த மிகப்பெரிய இடைவெளி கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 16 ஆண்டுகள் மற்றும் 160 நாட்களாக உள்ளது. 


உலகக் கோப்பை தொடரில் இதுவரை 10 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ள மெஸ்ஸி, 2014 மற்றும் 2022 ம் ஆண்டில் மட்டும் தலா 4 முறை ஆட்டநாயகன் விருது வாங்கியுள்ளார். இதன் மூலம், ஒற்றை உலகக் கோப்பை தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்ற கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.