இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்..?
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் குரோஷியா அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
அர்ஜெண்டினாவுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இன்று பலமிகுந்த பிரான்ஸ் அணியை குட்டி அணியான மொராக்கோ அணி எதிர்கொள்கிறது. கத்தாரில் உள்ள அல்ஹோரில் அல்பேய்ட் மைதானத்தில் இரு அணிகளும் இந்திய நேரப்படி இன்று இரவு 12.30 மணிக்கு நேருக்கு நேர் மோத உள்ளனர்.
யாருக்கு வாய்ப்பு அதிகம்..?
இந்த போட்டியை மொத்தம் 68 ஆயிரத்து 895 ரசிகர்கள் மைதானத்தில் நேரடியாக கண்டுகளிக்க உள்ளனர். இந்த பிரம்மாண்ட மைதானத்தில் கால்பந்து தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள அணியும், நடப்பு சாம்பியனுமாகிய பிரான்ஸ் அணியை தரவரிசையில் 22வது இடத்தில் உள்ள மொராக்கோ எதிர்கொள்ள உள்ளது. மொரக்கோ அணியுடன் ஒப்பிடும்போது பிரான்ஸ் அணி பலமடங்கு பலமிகுந்த அணியாகவே கருதப்படுகிறது. இதனால், அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஏராளமான ஆச்சரியங்கள் அரங்கேறி வருவதாலும், காலிறுதியில் போர்ச்சுக்கலையே மொராக்கோ வீழ்த்தியதாலும் அந்த அணி கடுமையான நெருக்கடியை பிரான்சுக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம். உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை படைத்த மொராக்கோ, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற வரலாற்றை படைக்கவும் முழு உத்வேகத்துடன் ஆடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
நட்சத்திர வீரர்கள்:
பிரான்ஸ் அணியும், மொராக்கோவும் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 3 போட்டிகளிலும் பிரான்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. பிரான்ஸ் அணிக்கு நடுவரிசையில் ஆட்ரெய்ன் ரேபியோட் பலமாக உள்ளார். முன்களத்தில் ஆலிவர் கிரவுட் பலமாக உள்ளார். பிரபல வீரர் எம்பாப்பே பிரான்ஸ் அணியின் பக்கபலமாக உள்ளார். மொத்தத்தில் பிரான்ஸ் அணியில் டெம்பெலி, ஹெர்னண்டெஸ் ஆகியோரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளனர்.
மொராக்கோ அணியும் தங்களது கூட்டு முயற்சியை முழுமையாக வெளிப்படுத்த தயாராக இருக்கும். மொராக்கோ அணியில் பலமாக யூசுப், ஹகிமீ, சாய்ஸ், யாமீக் ஆகியோர் உள்ளனர்.
உலகக்கோப்பையில் இதுவரை?
நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை பிரான்ஸ் அணி 11 கோல்கள் அடித்துள்ளது. பிரான்ஸ் அணிக்கு எதிராக 5 கோல்களை எதிரணிகள் அடித்துள்ளனர். இந்த தொடரில் இதுவரை 2 ஆயிரத்து 782 முறை பந்துகளை பாஸ் செய்துள்ளனர். 5 மஞ்சள் அட்டையை பெற்றுள்ளனர். ஒரு ரெட் கார்டு கூட பெறவில்லை.
மொராக்கோ அணி 5 கோல்கள் மட்டுமே அடித்துள்ளனர். ஆனால், இந்த தொடர் முழுவதும் எதிரணியை 1 கோல் மட்டுமே அடிக்க விட்டுள்ளனர். 1613 முறை பந்துகளை பாஸ் செய்துள்ளனர். 6 முறை மஞ்சள் அட்டையும், 1 முறை சிவப்பு அட்டையும் பெற்றுள்ளனர்.
மொத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் துடிப்புடன் ஆடும் என்பதால் இன்றைய போட்டி கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு அறுசுவை விருந்தாகவே அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.