FIFA World Cup 2022: 22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல கொண்டாட்டத்துடன் இன்று தொடங்கியது.
உலகக்கோப்பை தொடக்கம்:
ரசிகர்களின் படையெடுப்பால் கத்தார் நாடே திக்குமுக்காடி போயிருக்கிறது. கத்தாரின் அல்பெய்த் ஸ்டேடியத்தில் முதல் ஆட்டம் உலகக் கோப்பையை நடத்தும் கத்தாருக்கும் தென் அமெரிக்க நாடான ஈகுவடாருக்கும் இடையே ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரும், அவரது மனைவி சுதேஷ் தன்கரும் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக கத்தாருக்குச் சென்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தோம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
முன்னதாக, உலகக் கோப்பைப் போட்டியில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடக்க நிகழ்ச்சிகள் இரவு சுமார் 7.30 மணி அளவில் தொடங்கியது. தென் கொரியாவைச் சேர்ந்த இசைக்குழுவினரின் நிகழ்ச்சிகளும், அமெரிக்காவைச் சேர்ந்த இசைக்குழுவினர், கொலம்பியா, நைஜீரியா, உள்பட பல நாடுகளைச் சேர்ந்த பாப் பாடகர்களும் நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
கத்தாரில் மனித உரிமை மீறல் நிலவுவதாகக் கூறி அதை கண்டித்து பிரபல கொலம்பியா பாடகி ஷகிரா, பிரிட்டனின் டுவா லிபா, ராப் பாடகர் ராட் ஸ்டூவர்ட் விழாவை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1982-ஆம் ஆண்டுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட உலகக் கோப்பை முதல் ஆட்டம் இதுதான்.
உலகக் கோப்பையில் முதல் முறையாக 2002 இல் அறிமுகமான செனகல், அப்போது நடப்பு சாம்பியனாக இருந்த பிரான்ஸை முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
தரவரிசையில் 50-ஆவது இடத்தில் உள்ள கத்தார் அணி முதல் முறையாக உலகக் கோப்பையில் தடம் பதிக்கிறது. தனது முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 44-ஆவது இடத்தில் உள்ள ஈக்குவடாரை சந்திக்கிறது.
போட்டி நடுவரின் 'கிக்-ஆஃப்' விசிலுடன் இன்று போட்டித் தொடங்க உள்ளது.
இதற்கு முன் நேருக்கு நேர்
கத்தார்-ஈக்குவடார் அணிகள் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தலா 1 வெற்றியும், 1 ஆட்டம் டிராவிலும் முடிந்துள்ளது. 2018ஆம் ஆண்டில் நட்பு ரீதியிலான ஆட்டத்தில் கத்தார் அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது.
அல் பெய்த் ஸ்டேடியத்தில் இதற்கு முன்பு விளையாடிய 3 ஆட்டங்களிலும் கத்தார் வென்றது. இதற்கு முன்பு போட்டியை நடத்தும் அணி, லீக் சுற்றின் முதல் ரவுண்டில் தோல்வி அடைந்து வெளியேறியது என்ற சோகத்துக்குரியது தென் ஆப்பிரிக்கா. அந்த அணி 2010-இல் முதல் சுற்றுடன் வெளியேறியது.
அதுபோன்று நடக்காமல் தடுக்க கத்தார் அணி நிச்சயம் பாடுபடும். இதனால், ஆட்டத்தில் அனல் பறக்கும்.
உலகக் கோப்பையில் முதல் ஆட்டத்திலேயே வென்றால், ஆசிய கால்பந்து கூட்டமைப்பைச் சேர்ந்த அணிகளில் முதல் அணியாக கத்தார் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அல் பேத் ஸ்டேடியம் (Al Bayt Stadium)
அல்பேத் ஸ்டேடியத்தில் 60 ஆயிரம் பேர் வரை அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும். கத்தார்-ஈகுவடார் தொடக்க ஆட்டத்துடன் மொத்தம் 9 ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடக்கின்றன. கத்தார் மற்றும் வளைகுடா மண்டலத்தில் நாடோடி மக்கள் பயன்படுத்திய கூடாரமான பேத் அல் ஷார் போன்று இந்த ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது.