குரூப் இ பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் ஜப்பான் அணியை மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த ஆட்டம் அகமது பின் அலி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.


ஜப்பானை முதல் முறையாக கால்பந்தாட்டத்தில் அந்த அணி வென்றுள்ளது. இதற்கு முன்பு ஒரு முறை டிராவும், 3 முறை தோல்வியும் அடைந்துள்ளது கோஸ்டா ரிகா. அதேபோல், உலகக் கோப்பை தொடரில் இதற்கு முன்பு 2002ஆம் ஆண்டு தான் சந்தித்த ஆசிய அணியான சீனாவையும் 0-2 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகா வீழ்த்தியுள்ளது.


தரவரிசையில் 24 ஆவது இடத்தில் உள்ள ஜப்பான் அணி, தரவரிசையில் 31ஆவது இடத்தில் கோஸ்டா ரிகாவிடம் சரணடையும் என்று அந்நாட்டு ரசிகர்களே எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், அதுதான் கால்பந்தாட்டம். எந்த நிமிடத்திலும் எதுவும் நடக்கலாம். முதல் ஆட்டத்தில் ஸ்பெயினிடம் 7-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்த கோஸ்டா ரிகா தனது முதல் வெற்றியை நடப்பு உலகக் கோப்பை தொடரில் பதிவு செய்தது.


அதேநேரம், முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் சாய்த்த ஜப்பான் அணி, முதல் தோல்வியை இந்தத் தொடரில் சந்தித்துள்ளது. முன்னதாக, பந்து பெரும்பாலும் ஜப்பான் வீரர்கள் வசமே இருந்தது. எனினும் 3 முறை கோல் அடிக்க முயன்றும் அந்த அணியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அரண் போல் இருந்து ஜப்பான் வீரர்களின் கோல் முயற்சியை கோஸ்டா ரிகா வீரர்கள் தகர்த்தனர். அதேநேரம், முதல் பாதியில் கோல் அடிக்காமல் தடுப்பாட்டம் ஆடிவந்த கோஸ்டா ரிகா, இரண்டாவது பாதியில் வீறுகொண்டு எழுந்தது.






அந்த அணியின் வீரர் ஃபுல்லர் 81-ஆவது நிமிடத்தில் கோலை வலைக்குள் தள்ளினார். பின்னர் முழு நேரம் முடியும் வரை ஜப்பான் அணியால் கோல் எதையும் போட முடியவில்லை.


உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.


இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.


இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.


8 பிரிவுகள்
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும். 


மொத்தம் எத்தனை ஆட்டங்கள்
48 லீக் ஆட்டங்கள் உள்பட மொத்தம் 64 ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நடைபெறுகின்றன.


முதல்முறை
அரபு நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன் ஆசிய கண்டத்தில் கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.