ஃபிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று தென்கொரியாவும், கொலம்பியாவும் மோதியது. இதில், தென்கொரியாவுக்கு எதிராக கொலம்பியா வீராங்கனை லிண்டா கேசிடோ 2 வது கோலடித்தார். இதன்மூலம் கொலம்பியா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. 


ஆஸ்திரேலியாவின் மூர்ன் பார்க் நகரில் நடைபெற்ற 'குரூப் H' பிரிவில் இடம்பெற்றுள்ள கொலம்பியா அணியும், தென்கொரியா அனியும் மோதியது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய கொலம்பியா அணி எதிரணியை திணற செய்தனர். ஆட்டத்தின் 30 வது நிமிடத்தில் கொலம்பியா வீராங்கனை கேடலினா அஸ்மே தங்கள் அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். 


அதனை தொடர்ந்து அதே அணியை சேர்ந்த லிண்டா கேசிடோவும் 39வது நிமிடத்தில் கோல் செய்தார். ஆட்டநேர முடிவில் தென்கொரியா அணி எந்த கோலும் அடிக்காததால் கொலம்பியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.


புற்றுநோயை வென்ற லிண்டா கேசிடோ: 


கொலம்பியா அணிக்காக 2வது கோல் அடித்த லிண்டா கேசிடோக்கு தற்போது 18 வயதே ஆகியுள்ளது. இதன்மூலம், கொலம்பியா அணிக்காக சர்வதேச அரங்கில் தனது முதல் கோலை பதிவு செய்தார்.


லிண்டா கேசிடோ தனது 15 வயதை நிரம்பியிருந்தபோது கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு அறுவை சிகிச்சை செய்தகொண்ட அவர், சிறிது நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் தனக்கு விருப்பமான கால்பந்தை தேர்ந்தெடுத்தார். 


கால்பந்து வாழ்க்கை:


லிண்டாவின் கும்பத்தில் யாரும் எந்தவொரு விளையாட்டிலும் விளையாடியதில்லை. கேசிடோ தனது 5 வயதில் கால்பந்து விளையாட்டை தொடங்கினார். அதுவே அவரது பலமாகவும், பலவீனமாகவும் அமைந்தது.


தொடர்ந்து கால்பந்தின் மீதுள்ள காதலால் லிண்டா 11 வயதாக இருந்தபோது, ​​முன்னாள் கொலம்பியா தேசிய அணி வீராங்கனை கரோலினா பினெடாவின் விளையாட்டுப் பள்ளியான அட்லஸில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறிய அவர், கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் நடந்த ஷோபீஸ் போட்டியில் கொலம்பியா U17 களின் கேப்டனாக இருந்த லிண்டா, ஸ்பெயின் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்று கொடுத்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டிய முதல் கொலம்பியா வீராங்கனை என்ற பெயரையும் பெற்றார். அந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய அவருக்கு வெள்ளி பந்து மற்றும் வெண்கல பூட் விருதுகளை வென்றார். 


லிண்டா கேசிடோ தனது 18வது பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களிலேயே உலக புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் அணியில் கையெழுத்திட்டு களமிறங்கினார். இது அவரது வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணமாக அமைந்தது. 


புற்றுநோயிலிருந்து மீண்ட லிண்டா கூறியது, “ புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது மருத்துவமனையில் அனுமதிக்க பட்டேன். அங்கு எனக்கு மேற்கொள்ளபட்ட அனைத்து அறுவை சிகிச்சை காரணமாக நான் மீண்டும் கால்பந்து விளையாட முடியும் என்று நினைக்கவில்லை. மனரீதியாக இது என் வாழ்க்கையில் மிகவும் கடினமான தருணம். 


நான் கொண்ட நம்பிக்கையால் என்னால் குணமடைய முடிந்தது. எனது குடும்பத்தின் ஆதரவும் எனக்கு இருந்தது, இப்போது நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். நடந்தது என்னை வளரச் செய்தது. இங்கு இருப்பதற்கு நான் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் உணர்கிறேன்” என்றார்.