22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தாரில் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.


22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று குரூப் ஜி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை வீழ்த்தியது.


மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூன், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் குரூப் ஜி பிரிவில் இன்று மோதின.


இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது.  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. சுவிட்சர்லாந்து அணியின் வசமே பெரும்பாலும் கால்பந்து இருந்தது. கேமரூன் அணியும் கடும் சவால் அளித்தது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. அப்போது 48-ஆவது நிமிடத்தில் ப்ரீல் எம்போலோ கோல் பதிவு செய்தார்.


இதுதான் இவருக்கு முதல் உலகக் கோப்பைப் போட்டியாகும். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இவர் தாய்நாட்டுக்காக கோல் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.






ஆட்ட நேரம் முடிவில் கேமரூனால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. கூடுதல் நேரத்தில் கேமரூன் அணியால் கோலை வலைக்குள் செலுத்த முடியவில்லை. இதையடுத்து, சுவிட்சர்லாந்து முதல் வெற்றியை ருசித்தது. சுவிட்சர்லாந்து வெற்றியுடன் தொடங்கிய அல் ஜனாப் மைதனம் குறித்து பார்ப்போம்.


அல் ஜனாப் ஸ்டேடியம் (Al Janoub Stadium)
பாரசீக வளைகுடாவில் ஆழ்கடலில் முத்து எடுக்க பயன்படுத்தப்படும் பாரம்பரிய படகு போன்று இந்த ஸ்டேடியத்தின் மேற்பகுதி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இங்கு 6 லீக் மற்றும் ஒரு நாக்-அவுட் சுற்று ஆட்டம் நடக்கிறது. மொத்தம் 40 ஆயிரம் இருக்கைகள் உள்ளன.


இன்றைய ஆட்டம்


6.30 மணிக்கு தொடங்கும் அடுத்த ஆட்டத்தில் உருகுவே-தென்கொரியா மோதுகிறது. இந்த அணிகள் குரூப் எச் பிரிவில் இடம்பெற்றுள்ளன.


பின்னணித் தகவல்


இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை.


கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.



8 பிரிவுகள்
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும். 


மொத்தம் எத்தனை ஆட்டங்கள்
48 லீக் ஆட்டங்கள் உள்பட மொத்தம் 64 ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நடைபெறுகின்றன.


முதல்முறை
அரபு நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன் ஆசிய கண்டத்தில் கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். 
இதற்கு முன்பு கடந்த 2002ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளான தென் கொரியாவும், ஜப்பானும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இணைந்து நடத்தின.


குளிர்காலத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுவாகும். இங்கிலாந்து ராணி 2-ஆம் எலிசபெத் இல்லாமல் நடைபெறும் முதல் உலகக் கோப்பையும் இதுவே. உலகக் கோப்பையை நடத்தும் மிகச் சிறிய நாடு என்ற பெயரையும் கத்தார் பெற்றுள்ளது. அந்நாட்டின் மக்கள் தொகை 26 லட்சம் தான்.