உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். நேர்காணல் ஒன்றில் இவர் பகிர்ந்துள்ள தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 


பிரிட்டனின் பிரபல பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கனுக்கு அளித்த நேர்காணலில், அவர் விளையாடி வரும் மான்செஸ்டர் யுனைடெட் அணி குறித்தும் அவரின் போட்டியாளராக கருதப்படும் மெஸ்ஸி பற்றியும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். கிட்டத்தட்ட 90 நிமிட நேர்காணல், இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது.


வியாழக்கிழமை வெளியான நேர்காணலின் இரண்டாம் பாகத்தில், ஓய்வு குறித்து அவர் பகிர்ந்த கருத்து ரசிகர்களை அதிர்ச்சியின் உச்சத்திற்கே தள்ளியுள்ளது. 


ஓய்வு பெறுவேன் :


"ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்த்து போர்ச்சுகல் அணி மோதுகிறது. நீங்கள் 2 கோல்கள் அடிக்கிறீர்கள். லியோனல் மெஸ்ஸி 2 கோல்களை அடிக்கிறார். 94வது நிமிடத்தில், ஹாட்ரிக் கோல் அடித்து போர்ச்சுகல் அணியை உலகக் கோப்பையை வெல்ல வைக்கிறீர்கள். அப்போது, உங்கள் மனநிலை எப்படி இருக்கும்" என பியர்ஸ் மோர்கன் கேட்கிறார்.


 






அதற்கு பதில் அளித்த ரொனால்டோ, "மிக சிறப்பாக இருக்கும். நான் கோல் அடிக்காமல் போர்ச்சுகல் கோல் கீப்பர் கோல் அடித்து, எனது அணி உலகக் கோப்பையை வென்றாலும் களத்தில் மகிழ்ச்சியான மனிதனாக இருப்பேன். அப்படி நடந்தால், நான் கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன்" என்றார்.


மெஸ்ஸி மெஜிசியன்:


மெஸ்ஸி குறித்து மனம் திறந்த ரொனால்டோ, "அவர் ஒரு அற்புதமான வீரர். மெஜிசியன். நாங்கள் 16 ஆண்டுகளை கால்பந்து மேடையை பகிர்ந்து கொள்கிறோம். 16 ஆண்டுகள் என்று கற்பனை செய்து பாருங்கள். அதனால் அவருடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. வீட்டில் அவருடன் இருந்து அல்லது போனில் பேசுவதை எல்லாம் அடிப்படையாக கொண்டால் நான் அவருக்கு நண்பன் இல்லை.


இல்லை. ஆனால், ஒரே அணி வீரர் போல கருதுகிறேன். என்னைப் பற்றி அவர் பேசும் விதத்தில் நான் அவரை மதிக்கிறேன். அவருடைய மனைவியாக இருக்கட்டும் அல்லது என் மனைவியாக இருக்கட்டும் எல்லோரும் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர்கள். எல்லாருக்கும்ம் அவர் மீது மதிப்பு உண்டு. மெஸ்ஸியைப் பற்றி நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்? கால்பந்தாட்டத்தை சிறப்பாக விளையாடும் வீரர்" என்றார்.


40 வயது:


ஓய்வு குறித்து மனம் திறந்த அவர், "இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன். அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள். 40 வயதில் முடிக்க விரும்புகிறேன். 40 என்பது சரியான வயதாக இருக்கும். ஆனால், எனக்கு தெரியவில்லை. எதிர்காலம் பற்றி தெரியவில்லை.


சில நேரங்களில் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு விஷயத்தைத் திட்டமிடுவீர்கள். நான் பலமுறை சொன்னது போல், வாழ்க்கை மாறும், என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்குத் தெரியாது"  என்றார்.