கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது என நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கிளப் உறுதிப்படுத்தியது. ரொனால்டோ சமீபத்தில் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கனுடன் நேர்காணல் செய்ததற்காக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். அதன் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெளியேறுகிறார் ரொனால்டோ
நேர்காணலில், ரொனால்டோ பல பிரச்சினைகள் குறித்து மான்செஸ்டார் கிளப்பை விமர்சித்தார். ஒரு சில கிளப் முதலாளிகள் 'தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்ற' முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். ரொனால்டோவுடன் பிரிந்து செல்வதற்கான மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் முடிவு ரொனால்டோவின் பேட்டிக்கு பிறகு ஏற்பட்டதாக தெரிகிறது.
மான்செஸ்டர் ட்வீட்
அந்த தொலைக்காட்சி நேர்காணலைத் தொடர்ந்து, அவர் கிளப்பால் "பழிவங்கப்படுவதாக" உணர்ந்ததாகவும், புதிய மேலாளர் எரிக் டென் ஹாக்கை மதிக்கவில்லை என்றும் கூறினார். அவர்களின் அறிக்கையில், மான்செஸ்டர் யுனைடெட் எழுதியது, "கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு உடனடியாக வெளியேற உள்ளார்", என்று அறிவித்தது
ரொனால்டோவுக்கு நன்றி
மேலும் தனது ட்வீட்டில், "ஓல்ட் ட்ராஃபோர்டில் 346 போட்டிகளில் விளையாடி 145 கோல்களை அடித்த அவரது மகத்தான பங்களிப்பிற்காக கிளப் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது, மேலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிர்காலம் சிறக்க நல்வாழ்த்துக்கள்", என்று எழுதியிருந்தது.
எரிக் டென் ஹாக் குறித்து எழுதியபோது, "மான்செஸ்டர் யுனைடெட்டில் உள்ள அனைவரும் எரிக் டென் ஹாக்கின் கீழ் அணியின் முன்னேற்றத்தைத் தொடர்வதிலும், ஆடுகளத்தில் வெற்றியை வழங்க ஒன்றாகச் செயல்படுவதிலும் கவனம் செலுத்துகின்றனர்." என்று கூறப்பட்டிருந்தது.
ரொனால்டோவின் கிளப் பயணங்கள்
இந்த விவகாரம் குறித்து ரொனால்டோ வும் பேசியுள்ளார். ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து விலகுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த வருடம்தான் ஜுவெண்டஸ்-இல் இருந்து மான்செஸ்டருக்கு திரும்பினார். போர்ச்சுகீசிய வீரரான இவர் முதன்முதலில் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறி 2009 இல் ரியல் மாட்ரிட்டில் இணைந்தார்.
அந்த அணிக்காக அவர் 9 ஆண்டுகள் விளையாடி பல அதிரடி கோல்களை சேர்த்து பல பெருமைகளை அணிக்கு சேர்த்தார். பின்னர் அவர் ஓல்ட் டிராஃபோர்டுக்குத் திரும்புவதற்கு முன்பு இத்தாலிய ஜாம்பவான்களான ஜுவென்டஸுக்காக மூன்று ஆண்டுகள் விளையாடினார். ரொனால்டோவின் மேனேஜர் ஜார்ஜ் மென்டிஸ் பல கிளப்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார், ஆனால் 37 வயதான அவர் அடுத்து எந்த அணியில் சேருவார் என்பது இன்னும் சரியாக தெரியவரவில்லை.