வங்க கடலில் சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே நகர கூடும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் பெரும் மழை எதிர்பார்க்கலாம் என கூறப்பட்டது.
வலுவிழந்த காற்றழுத்தம்:
ஆனால் காற்றழுத்த தாவு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேலும் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும் வானிலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சரி, இதற்கும் சென்னை உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் நிலவும் குளிருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா, இல்லை குளிர்காலம் முன்கூட்டியே தொடங்கி விட்டதா என்பது குறித்து காண்போம்.
சென்னை குளிர்:
சில தினங்களுக்கு முன்பு, தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவியது. அதற்கு, நிலை கொண்டுள்ள பகுதியில் இருந்து சுற்றி இருக்கும் காற்றை இழுக்கும் தன்மை இருக்கும். அதாவது காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலுக்கு முந்தைய நிலையாகும்.
இந்நிலையில் வங்கதேசம் உள்ளிட்ட வட பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் அதிகம் காணப்படுகிறது. இந்த ஈரப்பதத்தை, காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஈர்ப்பதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் அதிகம் காணப்படுகிறது.
இதையடுத்து, தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நாளை வட தமிழகம் மற்றும் ஆந்திர இடையே கரையை கடக்க கூடும் என வானிலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆகையால், கரையை கடக்கும் போது முற்றிலும் வலுவிழந்து அதன் சக்தியை இழந்து விடும். பின்னர் வட பகுதியிலிருந்து இழுக்கும் ஈரப்பதமும் நின்று விடும். இதையடுத்து குளிர் குறைய கூடும் என வானிலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆகையால் நாளை வரை குளிர் நிலவும் என எதிர்பார்க்கலாம்.
மிதமான மழை
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.
காற்றழுத்தமானது, நாளை கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.