கத்தாரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக், 2-வது சுற்று மற்றும் காலிறுதி போட்டிகளை தொடர்ந்து அர்ஜெண்டினா, குரோஷியா, நடப்பு சாம்பியனான பிரான்சு மற்றும் மொராக்கோ ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதில் இன்று நடைபெற உள்ள முதல் அரையிறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா, குரோஷியா அணிகளும், நாளை நள்ளிரவு நடைபெற உள்ள போட்டியில் பிரான்சு மற்றும் மொராக்கோ அணிகளும் மோத உள்ளன. உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோத உள்ள போட்டி, லுசைஸ் ஐகானிக் மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.


அர்ஜெண்டினா அரையிறுதி பயணம்:


உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினா லீக் சுற்றில் தொடக்கத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  அதைதொடர்ந்து,  மெக்சிகோ, போலந்து அணிகளை தோற்கடித்து நாக்-அவுட் சுற்றை எட்டிய அர்ஜென்டினா, 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அனல் பறந்த காலிறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. கேப்டன் லயோனல் மெஸ்ஸி, ஜூலியன் அல்வாரஸ், என்ஜோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மாக் அலிஸ்டர், நாகெல் மொலினா உள்ளிட்டோர் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். நடப்பு உலக்ககோப்பை தொடரில் மட்டும் மெஸ்ஸி 4 கோல்கள் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆட்டத்தில் ஹீரோவாக ஜொலித்த கோல் கீப்பர் எமிலியானா மார்ட்டினஸ் அந்த அணிக்கு இன்னொரு பலமாகும். 


குரோஷியா அரையிறுதி பயணம்:


உலக தரவரிசை பட்டியலில் 12-ம் நிலை அணியான குரோஷியா நடப்பு தொடரில் தோல்வியை தழுவவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. லீக் சுற்றில் ஒரு வெற்றி, 2 டிராவுடன் தங்களது பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அந்த அணி 2-வது சுற்றில் ஜப்பானை வீழ்த்தியது. உலகின் நம்பர் ஒன் அணியான பிரேசிலுக்கு எதிராக காலிறுதியில் தோல்வியின் விளிம்பில் இருந்த குரோஷியா அணி,  கூடுதல் நேரத்தில் 117-வது நிமிடத்தில் கோல் போட்டு போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்ததுடன், பெனால்டி ஷூட்-அவுட்டில் வெற்றிக்கனியை பறித்தது.


கடும் போட்டி அளிக்கும் குரோஷியா:


கடந்த உலகக் கோப்பையில் இறுதி சுற்றில் தோல்வியை தழுவிய குரோஷியா இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. கேப்டன் லூகா மோட்ரிச், மேட்டியோ கோவாசிச், மார்செலோ பிரஜோவிச் நடுகளத்தின் ஆணிவேராக உள்ளனர்.  நடப்பு உலகக் கோப்பையில் 6 கோல்கள் போட்டுள்ள குரோஷியா, எதிரணிக்கு 3 கோல் அடிக்க மட்டுமே வாய்ப்பு வழங்கியுள்ளது. குரோஷியாவை பொறுத்தவரை தடுப்பாட்டத்தில் சாதுர்யமாக செயல்படக்கூடிய ஒரு அணி. வழக்கமான நேரம் மற்றும் கூடுதல் நேரத்தில் சமநிலையுடன் ஆட்டத்தை நகர்த்தினால் அதன் பிறகு பெனால்டி ஷூட்-அவுட்டில் அவர்களை அடக்குவது கடினம். கடந்த உலகக் கோப்பையில் 2 முறை பெனால்டி ஷூட்-அவுட்டில் வெற்றி பெற்ற குரோஷியா, நடப்பு உலக கோப்பையிலும் ஜப்பான், பிரேசிலை பெனால்டி ஷூட்-அவுட்டில் தான் வீழ்த்தியது. பிரேசிலுக்கு எதிராக 11 ஷாட்டுகளை தடுத்து நிறுத்திய கோல் கீப்பர் டொமினிக் லிவாகோவிச் குரோஷியாவின் தற்காப்பு அரணாக உள்ளார். 


 


மீண்டும் சாம்பியன் ஆகுமா அர்ஜெண்டினா?


இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்று நம்பப்படுகிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள 35 வயதான மெஸ்ஸிக்கு உலகக் கோப்பையை கைப்பற்ற இதுவே கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. ஏற்கனவே நட்சத்திர வீரர்களான போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரேசிலின் நெய்மார் தோல்வியால் கண்ணீர் மல்க தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர். அந்த சோக வரிசையில் சிக்காமல் மெஸ்ஸி, தனது முதல் உலகக்கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துவாரா என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 1978, 1986-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா அரையிறுதியில் ஒரு போதும் வீழ்ந்ததில்லை. அந்த பெருமையோடு 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கும் உத்வேகத்துடன் வியூகங்களை தீட்டி வருகிறது. 


சாதிப்பாரா மெஸ்ஸி?


கால்பந்தாட்ட உலகின் பெரும் கவுரவமாக கருதப்படும் Ballon d'Or விருதுகளை 7 முறை வென்றுள்ள மெஸ்ஸி, 101 முறை லா லீகா கோப்பையையும், 4 முறை UEFA  கோப்பையையும் வென்றுள்ளார். அதேநேரம் அர்ஜெண்டினா அணிக்காக விளையாடும் மட்டும் அவரால், பெரிதாக எந்த கோப்பையையும் வெல்ல முடியவில்லை என்பதே மெஸ்ஸியின் மோசமான வரலாறு. அதேநேரம், கடந்த ஆண்டு  மெஸ்ஸி தலைமையில் கோபா அமெரிக்கா கோப்பையை கைப்பற்றிய உற்சாகத்தில், இன்றைய போட்டியில் அர்ஜெண்டினா களமிறங்க உள்ளது.