கத்தாரின் தோஹாவில் உள்ள அஹ்மத் பின் அலி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற 16வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜென்டினா காலிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் அந்த அணி காலிறுதியில் யாரை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பதில் கிடைத்துள்ளது.


காலிறுதி வாய்ப்பு


இரண்டு முறை FIFA உலகக் கோப்பை வென்ற அணியான அர்ஜென்டினா கடந்த உலகக்கோப்பையில் காலிறுதிக்கே வராமல் போனது உலகம் முழுவது உள்ள கால் பந்து ரசிகர்களின் வருத்தமாக அமைந்து இருந்தது. கடந்த முறை சாம்பியனான பிரான்சிடம், 16-வது சுற்றில், 3-4 என்ற கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து, அதன் ஓட்டம் முன்கூட்டியே முடிவடைந்தது. தற்போது ஆஸ்திரேலியாவை வென்றதன் மூலம் லியோனல் மெஸ்ஸிக்கும் அவரது அணிக்கும் அந்த களங்கத்தை துடைக்கும் வாய்ப்பு இம்முறை கிடைத்துள்ளது.



நெதர்லாந்துடன் மோதும் அர்ஜென்டினா


1998-ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாவது முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள அர்ஜென்டினா அணி இம்முறை காலிறுதியில் யாரை சந்திக்கும் என்ற கேள்விதான் எல்லோரிடமும் இருந்தது. ஆஸ்திரேலியா அர்ஜென்டினா போட்டிக்கு முன்னதாக கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடந்த 16-வது சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி அமெரிக்காவை வீழ்த்திய நிலையில் அர்ஜென்டினா தற்போது காலிறுதியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.


தொடர்புடைய செய்திகள்: FIFA World Cup 2022 : "விரைவில் குணமடையுங்கள் பீலே" - பிரேசில் போட்டியின் போது ரசிகர்களின் நெகிழ்ச்சி சம்பவம்


டிசம்பர் 10 அன்று நடைபெறும் போட்டி


அர்ஜென்டினா தனது காலிறுதி ஆட்டத்தை எப்போது எங்கு விளையாடும் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மனதில் இருக்கும். அர்ஜென்டினா தனது FIFA உலகக் கோப்பை 2022 காலிறுதிப் போட்டியை டிசம்பர் 10 அன்று விளையாடுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டி கத்தாரின் லுசைலில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.



முந்தைய மோதல்கள்


அர்ஜென்டினாவும் நெதர்லாந்தும் இதற்கு முன் ஒன்பது முறை மோதியுள்ளனர் அதில் நெதர்லாந்து நான்கு முறை வென்று முன்னிலையில் உள்ளனர். அர்ஜென்டினா மூன்று முறை மட்டுமே வென்றுள்ளது. மற்ற இரண்டு முறை டிரா ஆகி உள்ளது. இவற்றில் ஐந்து முறை FIFA உலகக் கோப்பையில் சந்தித்துள்ளன, அவற்றில் இரு அணிகளும் சமமாக தலா இரு போட்டிகளை வென்றுள்ளனர். ஒன்று லீக் ஆட்டம் டிரா ஆகியுள்ளது. கடைசியாக 2014 உலகக் கோப்பை அரையிறுதியில் இரு அணிகளும் மோதியபோது நெதர்லாந்து அணி பெனால்டியில் 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினர். சம பலத்துடன் இருந்தாலும் உலகெங்கும் ரசிகர்கள் கொண்ட அர்ஜென்டினா அணி போட்டி என்பதால் போட்டிக்கான எதிர்பார்பு அதிகரித்து உள்ளது. இம்முறை அர்ஜென்டினா இருதிப்போட்டிக்கு வர வேண்டும் என்று பலரும் விரும்பும் பட்சத்தில் இந்த போட்டி ஒரு முக்கிய புள்ளியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.